தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 23) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.
இதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜா அறிவித்துள்ளார்.
கன மழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து தனியார் பள்ளி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளார் புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம்
இதற்கிடையே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
சென்னை, செங்கல்பட்டு, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியிலும் இதேபோன்ற மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அரியலூர், கோவை, தர்மபுரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மழை நிலவரத்தைக் கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.