தமிழ்நாடு

21 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை... கொட்டித் தீர்க்கும் கனமழையால் அறிவிப்பு...

தமிழகத்தில் கனமழை காரணமாக 21 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. கடந்த இருவாரங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் நான்கு நாட்களுக்கு விடாமல் மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தெற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய தமிழக கடலோரத்தில் வளி மண்டல காற்று சுழற்சி நீடித்து வருகிறது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், காற்றின் திசை மாறுபாடு காரணமாக தற்போது அது வலுப்பெற வாய்ப்பில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனிடையே தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சென்னை, செங்கல்பட்டு உள்பட 21 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.