அதிமுகவில் நேற்று வரை இரண்டு தலைமைகள் இருந்த நிலையில் தற்போது அவை நான்கு ஐந்தை கடந்து விட்டதாக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசு அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து தொற்று பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
மேலும், தொற்று பாதிப்பு, பலி எண்ணிக்கை உள்பட அனைத்திலுமே திமுக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதாக தெரிவித்த அவர், ஜெயக்குமார் போன்ற ஒரு சிலர் மட்டுமே விமர்சிப்பதாகவும், மற்றபடி எதிர் தரப்பினரும் பாராட்டும் ஆட்சி நடக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் கருத்துவேறுபாடுகள் ஏதும் இன்றி ஒற்றை தலைமையில் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், கடந்த ஆட்சியில் ஒரே உறையில் நான்கு ஐந்து கத்திகள் இருந்தது, ஆனால் திமுக ஆட்சியில் ஒரே கத்தி தான் இருக்கிறது என தெரிவித்தார்.