தமிழ்நாடு

“நானே சட்டமன்றத்துக்கு சைக்கிள்ல தான் போவேன்”- சீமான் மீது வழக்கு.. திருப்பூர் பிரசாரத்தில் நடந்த ட்விஸ்ட்!

விசில் தியேட்டரில் ஊதி கிடந்தவர்கள், இப்போது தெருவில் ஊத்திக்கிட்டு இருக்காங்க..

மாலை முரசு செய்தி குழு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருப்பூரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் தனது வழக்கமான நேரடி மற்றும் கடுமையான அரசியல் பேச்சு பாணியில் உரையாற்றி, பல கட்சிகளை விமர்சித்ததுடன் விவசாய சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

திருப்பூர் யூனியன் மில் சாலையில் மாலை 7.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கூட்டம், ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்ற பரப்புரைகளின் காரணமாக சுமார் 2 மணி நேரம் தாமதமாகி, இரவு 9.20 மணியளவில் சீமான் வந்தடைந்தார். பின்னர் அவர் மேடையேறி உரையைத் தொடங்கினார். உரையின் தொடக்கத்தில் அவர், “இலைக்கு ஓட்டு போட்டீர்கள்… மொட்டையாகி போச்சு! சூரியனுக்கு வாக்களித்தீர்கள்… அவர்கள் வீட்டில் தான் விடிந்தது; தமிழகம் இருண்டுதான் இருக்கிறது. விசில் தியேட்டரில் ஊதி கிடந்தவர்கள், இப்போது தெருவில் ஊத்திக்கிட்டு இருக்காங்க,” எனக் கடுமையாக விமர்சித்தார்.

அடுத்து, நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை வீடியோ காட்சிகள் மூலம் விளக்கி, “தொழிற்சாலைகளால் தமிழகம் முழுக்க மாசு நிரம்பி கிடக்குது. அதை மாற்றி, விவசாயத்தை மையமாக வைத்து தொழில்கள் உருவாக்குவோம். எல்லாருக்கும் வேலை கொடுப்போம்,” என்றார். திமுக மற்றும் அதிமுக-வின் இலவச திட்டங்கள் குறித்து பேசும்போது, “என் ஆட்சியில் ஓசி பஸ் கிடையாது… ஏசி பஸ் தான் விடுவேன், ஆனா கட்டணம் தான். நல்ல சாலை, தரமான சேவை, இடை நிறுத்தமில்லாத மின்சாரம்—இது எல்லாமே பணம் தான். இலவசம் குடுத்தா மக்களுக்கு பொறுப்பே இருக்காது,” என்று தெரிவித்தார்.

மேலும், “இலவச மின்சாரம் கொடுக்கலாம்… ஆனா வீட்டை பூட்டி வெளியே போறப்போ, விசிறி, விளக்கு அணைப்பீங்களா? பொறுப்பே இல்லாம போயிடும். அதனால சேவை தரம் வேண்டும் என்றால் கட்டணம் அவசியம்,” எனக் கூறினார். இளைஞர்களை குறிவைத்து, “எல்லா இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்குவேன். வடநாட்டு தொழிலாளர்கள் வரவேண்டிய அவசியமே இருக்காது,” என்றார். அதோடு, “மதுக்கடையை மூடுவேன், மாவட்டம் தோறும் தொழில் பயிற்சி நிலையம் அமைத்து, வேலைக்கு தயாராக்குவேன். உட்கார்ந்து சாப்பிட என் ஆட்சி இல்லை… உழைத்து சாப்பிடணும்,” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அரசு வேலைகள் குறித்து பேசிய சீமான், “தமிழ் படிச்சவங்களுக்கு தான் அரசு வேலை, அரசு பள்ளியில் படிச்சவங்களுக்கு தான் முன்னுரிமை,” என்றார். மேலும், “நான் சொல்வது புரட்சி… புரட்சி என்றால் தலைகீழா மாற்றுவது. எல்லாம் சைக்கிள்ல தான் போகணும்… நானே சட்டமன்றத்துக்கு சைக்கிள்ல போவேன்,” எனக் கூறினார். அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு குறித்து தொடங்கிய சீமான், “தலைவன் மக்களுக்கு பாதுகாப்பு தரணும்… தலைவனுக்கு எதுக்கு பாதுகாப்பு?” என கேள்வி எழுப்பினார். மீண்டும் அரசியல் கட்சிகளை விமர்சித்த அவர், “சூரியன், இரட்டை இலை, தாமரை—இந்த மூணும் வேண்டாம். எனக்கு ஓட்டு போடலைன்னாலும் பரவாயில்லை… ஆனா மறந்தும் அந்த சின்னங்கள்ல போடாதீங்க. வேண்டுமானால் சினிமாவுக்கு போய்ட்டு தூங்கிடுங்க,” எனத் கட்டமாக பேசினார்.

மேலும், “இந்த தேர்தலில் இரண்டு பக்கம் தான்—நமக்கு பிரச்சனை கொடுத்தவர்கள் ஒரு பக்கம்… நாம ஒரு பக்கம்,” என்று கூறி, “விவசாய சின்னத்திற்கு வாக்களியுங்கள்,” என மக்களிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் எட்டு தொகுதி வேட்பாளர்களை மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு ஆதரவு கோரினார். கூட்டம் தாமதமாக தொடங்கியதால், இரவு 10 மணியை கடந்தும் உரையாற்றிய சீமான், “ஏற்கனவே 262 வழக்குகள் இருக்கு… இன்னொரு வழக்கு ஆகட்டும்!” எனக் கூறி தனது உரையைத் தொடர்ந்தார். இறுதியாக, இரவு 10.20 மணியளவில் பரப்புரை கூட்டம் நிறைவடைந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.