``அறியாமையா? ஆலைகளின் 'கமிஷனா?'" - ஆற்றில் நுரை வர என்ன காரணம்? 'தவெக' அமைச்சரை வெளுத்து வாங்கிய 'பாஜக' தலைவர்! 
தமிழ்நாடு

``அறியாமையா? ஆலைகளின் 'கமிஷனா?'" - ஆற்றில் நுரை வர என்ன காரணம்? 'தவெக' அமைச்சரை வெளுத்து வாங்கிய 'பாஜக' தலைவர்!

"விஞ்ஞான" ரீதியான விளக்கத்தை தவெக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர்‌ ராஜீவ் அவர்கள் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

Antony Ajay R

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ், "மழைக் காலங்களில் தண்ணீர் மேலிருந்து கீழே விழும்போது இயல்பாகவே ஆற்றில் நுரை பொங்கும். அது மட்டுமல்லாமல், மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு கலப்பதால் அதிகளவில் நுரை ஏற்படுகிறது. மழையைப் பயன்படுத்திக் கொண்டு சாயப் பட்டறைகள் மற்றும் ஜவுளித் தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனக் கழிவுகளை சுத்திகரிக்காமல் ஆற்றில் திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதற்கு விளக்கம் அளித்த அவர், "கழிவுநீரில் இருக்கிற வேதிப்பொருட்கள், சலவைப்பொருட்கள், பாஸ்பரஸ் ஆகிய பொருட்களின் ஆகிய காரணத்தால் நுரை ஏற்படும். கழிவுநீர் என்றால் நமது வீட்டில் உபயோகப்படுத்தும் சாக்கடை தண்ணீர்தான். இந்த மூன்றுமே நுரை ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. தொழில்துறை கழிவால் அந்த நுரை ஏற்படவில்லை என்று தான் கூறினேன்." என்றார்.

ஆற்றில் நுரை வர ஆலைகள் காரணம் இல்லை என அமைச்சர் பேச அங்கிருந்து வரும் கமிஷன்தான் காரணம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது சமூக வலைத்தள பதிவில், "நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு தான் காரணம் எனக் கூறியது அறியாமையிலா? அல்லது, கமிஷன் தந்த ஆலைகளை காப்பாற்றவா?

மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு ஆகியவை ஆற்றில் கலப்பதனால் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குகிறது என்னும் "விஞ்ஞான" ரீதியான விளக்கத்தை தவெக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர்‌ ராஜீவ் அவர்கள் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஆலைகளின் ரசாயனக் கழிவுநீர் நீர்நிலைகளில் சட்டவிரோதமாக திறந்துவிடப்படுவதே நுரை பொங்க முக்கியக் காரணம் எனும் அடிப்படைக் கூற்றை மறைத்து, சோப்பு ஷாம்பு தான் காரணம் என மக்களை நோக்கி குறைகூறும் தவெக அமைச்சரின் இந்தக் கருத்தை அறியாமை என எளிதாக புறந்தள்ளிவிட முடியாது.

தமிழகத்தின் நீராதாரங்களை கண்காணிக்க இயலாத தவெக அரசின் திறனின்மையை மறைப்பதற்காவோ அல்லது சம்பந்தப்பட்ட ஆலைகளை காப்பாற்றி கமிஷன் பெறுவதற்காகவோ கூறப்பட்ட கருத்தோ இது எனும் சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை.

பதவியேற்றப் புதிதில் தனது துறையை மாற்றிக் குறிப்பிட்டதைப் போல, இன்னும் தான் வகிக்கும் துறையை சுற்றுலாத் துறை என்றே நினைத்துக் கொண்டிருக்கிறாரா என்றும் புரியவில்லை.

இனியாவது, தொட்டதற்கெல்லாம் மக்களை நோக்கி குறை சொல்வதை விடுத்து, அமைச்சர் ராஜீவ் அவர்கள் தான் வகிக்கும் பதவியின் பொறுப்பினை உணர்ந்து, முதலில் போர்க்கால அடிப்படையில் நொய்யல் ஆற்றினை தூய்மைப்படுத்த வேண்டும்! கமிஷன் தூண்டிலில் சிக்காமல், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நீராதாரத்தை காக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்!" எனப் பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்