தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' எனும் இருமல் மருந்தால் மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் சென்னை போலீஸ் உதவியுடன் குற்றம் சாட்டப்பட்டவரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.
பெயிண்ட், மை, ரெசின், டை போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டைஎத்திலீன் கிளைகால் எனும் நச்சுத்தன்மையுள்ள ரசாயனப் பொருள் இருமல் மருந்தில் அதிகமாக கலக்கப்பட்டுள்ளதும், அது குழந்தைகளிடையே சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தியுள்ளதும் ஆய்வில் உறுதியானதை அடுத்து தமிழ்நாடு மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வந்த ஶ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டது.
குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஶ்ரீசென் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் மீது மத்திய பிரதேசம் மாநிலம் பராசியா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சென்னை விரைந்த மத்திய பிரதேச போலீசார் நள்ளிரவு அசோக் நகர் போலீசார் உதவியுடன் சென்னை கோடம்பாக்கம் நாகார்ஜுனா நகர் இரண்டாவது தெருவில் வசித்து வந்த ஶ்ரீசென் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் வயது ( 75) கைது செய்து விசாரணைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வந்த ஶ்ரீசென் பார்மா நிறுவனத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.