தமிழ்நாடு

தொடர் மழையால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு...சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிப்பு!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டின் பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை 11-ஆவது  நாளாக தொடர்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட்டக்கானல், வெள்ள கெவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக  பெய்து வரும் கனமழையின் காரணமாக அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத் துறையினர் தடை விதித்தனர். இந்த தடை தற்போது வரை தொடர்வதால், தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

சுருளி அருவிப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இன்று விடுமுறையை முன்னிட்டு அருவியில் குளிக்க அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில்,  வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து கண்காணித்த வனத் துறையினர் அருவிக்குச் செல்லும் பாதைகளில் யானைகள் இருப்பதை கண்டறிந்தனர். இதன் காரணமாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை  விதித்தனர். 

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 14 ஆவது நாளாக நீடிக்கிறது. அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.