தமிழ்நாடு

தீபாவளி கொண்டாட்டம் எதிரொலி... சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு...

தீபாவளி கொண்டாட்டம் காரணமாக, சென்னையில் பெரும்பாலான இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

ஒவ்வொரு தீபாவளிக்கும் மிகப்பெரிய கவலையாக, காற்று மாசு பிரச்சனை உருவெடுத்து வருகிறது. அதன்படி, இந்தாண்டு தீபாவளி பண்டிகையை ஓட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளால், இந்தியா முழுவதும் பல நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 414 என்ற அளவில் அதிகரித்துள்ளதாக, காற்று தர கண்காணிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நொய்டாவில் 436 ஆகவும், கொல்கத்தாவில் 209 ஆகவும், சென்னையில் 118 ஆகவும், புதுச்சேரியில் 78 ஆகவும், பெங்களூருவில் 62 ஆகவும் காற்றின் மாசு அளவு பதிவாகி உள்ளது.

காற்றின் தரக் குறியீடு பூஜ்ஜியத்திற்கும் 50-க்கும் இடையில் இருந்தால் நல்லது. குறியீடு எண் 51-க்கும் 100-க்கும் இடையில் இருந்தால் திருப்திகரமானது. 101-க்கும் 200-க்கும் இடையில் இருந்தால் மிதமானது. 201-க்கும் 300-க்கும் இடையில் இருந்தால் மோசம். 301-க்கும் 400-க்கும் இடையில் இருந்தால் மிகவும் மோசமானது மற்றும் 401-க்கும் 500-க்கும் இடையில் இருந்தால் கடுமையானது என கருதப்படுகிறது.

எனவே, சென்னையில் காற்றின் தரக்குறியீடு 118 என்பது மிதமான காற்று மாசு அளவை குறிப்பதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.