விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினரும் சமூகநீதி துறை அமைச்சருமான வன்னிஅரசு அலுவலகத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், வன்னி அரசு அவர்களை வெற்றி பெறவைத்த திண்டிவனம் தொகுதி மக்களுக்கும், திமுக உள்ளடங்கிய மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “எதிர்பாராத வகையில் இந்த தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும் சூழலை மக்கள் உருவாக்கியுள்ளனர். விசிக-வின் நீண்ட கால கனவு நனவாகும் வகையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதற்காக தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
“தவெக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்க முடியாத சூழலில். அதிமுக, பாஜக ஆதரவை பெற முயற்சிக்காமல் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட மதசார்பற்ற சக்திகளின் ஆதரவை பெற முயற்சி செய்தது. எனவே விசிக ஆதரவு அளித்தது. விசிகவும் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில் அமைச்சரவையில் இடம் பெறுவது என முடிவு செய்தோம். அமைச்சராக பொறுப்பேற்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது” என்று மகிழ்ச்சி தெரிவித்தார். பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது, தவெக-வின் புதிய கூட்டணி குறித்து “சமூக நீதி முற்போக்கு கூட்டணி என்று உருவாவது குறித்து அதிகாரப்பூர்வமாக யாரும் என்னிடம் பேசவில்லை. அவரின் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து இடதுசாரிகளின் கருத்து சரியானது" என்றும் "நாங்கள் அதனை ஆமோதிக்கின்றோம்” என்றும் தெரிவித்தார். மேலும் அவர், நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தாலும் கூட்டணி குறித்து எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “விஜய் ஆட்சிக்கு வந்து இரண்டு வார காலம் தான் ஆகிறது. கருத்து சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட முதல்வர் கருத்து சொல்ல தயங்கலாம்” என்று கூறினார். மேலும் அவர், “பொறுத்திருந்து பார்ப்போம்” என்றும் “விஜயின் செயல்கள் திருப்தி அளிக்க கூடியவையாக இருக்கும் என நம்புகிறேன், புதிய ஆட்சி ஆறு மாத காலம் அமைதியாக இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பத்திரிக்கையாளர் ஒருவரின் இந்தியா கூட்டணி குறித்த கேள்விக்கு “இந்தியா கூட்டணி அமைந்ததில் திமுக-வின் பங்கு மகத்தானது. திமுக இல்லாமல் இந்தியா கூட்டணி கூடுகிறது என்பது உள்ளபடியே கவலை அளிக்கக் கூடிய ஒன்று” என்றும் அதற்காக பெரிதும் வருந்துவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தியா கூட்டணி சிதறி விடக்கூடாது என்று விரும்புவதாகவும் 8-ம் தேதி நடைபெற உள்ள இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் அண்ணாமலையின் புதிய இயக்கம் குறித்து “அண்ணாமலை தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் வேறு முழக்கத்தோடு களம் காண விரும்புகிறார்” என்றும் “பாஜகவின் இன்னொரு முகமாக இல்லாமல் புதிய முகமாக தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக தமிழ்நாட்டின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் அண்ணாமலையின் அரசியல் இருக்குமானால் அதனை வரவேற்பதாகவும் தெரிவித்தார். அதனைதொடந்து “அதிமுக பலவீனப்படுவது அந்த கட்சிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்” என்றும் “திராவிட கட்சிகள் இரண்டும் வலுவாக இருந்த காரணத்தினால் தான் இங்கே பாஜக போன்ற மதவாத கட்சிகள் காலூன்ற முடியவில்லை. திராவிட கட்சிகளான திமுகவும், அதிமுகவும் பலவீனப்பட்டால் இங்கே மதவாத சக்திகளுக்கு வாய்ப்பளிப்பதாக அமைந்து விடும்” என்று கருத்து தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.