தமிழ்நாடு

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆயாம்மா! குழந்தை உயிரிழந்ததால் கண்ணகி நகர் அரசு மருத்துவமனையில் போராட்டம்.. MLA-வின் அலட்சிய பதில்?

அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யாரும் இல்லாத நேரத்தில் மெர்ஷிக்கு அங்கு வேலை பார்க்கும் ஆயம்மா

Muthu Lakshmi

சென்னை கண்ணகி நகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு அங்கே ஹவுஸ் கீப்பிங் வேலை பார்க்கும் ஆயாம்மா சிகிச்சை பார்த்ததால் உயிரிழந்த நிலையில் குழந்தை பிறந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு. ஆத்திரமடைந்த உறவினர்களும், அப்பகுதி மக்களும் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள்  கண்ணகி நகர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற சோழிங்கநல்லூர் தவெக எம்எல்ஏவை முற்றுகையிட்ட மக்கள் இந்த மருத்துவமனையை ஏற்கனவே ஆய்வு செய்து சென்ற நிலையில் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் ஒரு குழந்தை இறந்து இருக்காது என சரமாரி கேள்விகளை முன் வைத்தனர். 

சென்னை கண்ணகி நகர் பகுதியில் உள்ள நான்கு அடுக்கு குடியிருப்பில் வசித்து வருபவர் ஸ்டீபன் ராஜ் (35), இவரது மனைவி மெர்சி (33). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மெர்சி, கண்ணகி நகர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக தொடர்ந்து சென்று வந்துள்ளார். நேற்று இரவு மெர்சிக்கு திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை கண்ணகி நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யாரும் இல்லாத நேரத்தில் மெர்ஷிக்கு அங்கு வேலை பார்க்கும் ஆயம்மா இருவர் சிகிச்சை அளித்ததாக மெர்ஷியின் உறவினர் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே அறுவை சிகிச்சை மூலம் முதல் குழந்தையை பெற்றெடுத்த மெர்ஷிக்கு இரண்டாவது குழந்தை எப்படி உள்ளது என்று கையுறை போட்டுக் கொண்டு ஆயம்மா சோதித்து பார்த்ததாகவும் தெரிவித்தனர். மேலும் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் மெர்ஷிக்கு முறையான சிகிச்சை அளிக்காமல், வெறும் வலி நிவாரண மாத்திரைகளை மட்டும் கொடுத்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக திருவல்லிக்கேணியில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவசரப் பிரிவில் மெர்சிக்கு அறுவை சிகிச்சை  மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தை ஏற்கனவே இறந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மெர்சிக்கு பிறந்த முதல் குழந்தையும் குறைப் பிரசவமாகப் பிறந்தது. அதற்கும் கண்ணகி நகர் மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என்றும் தற்போதும் அவர்கள் உரிய நேரத்தில் முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதாலேயே மெர்சியின் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்துள்ளது என கூறி உறவினர்கள் கண்ணீருடன் குற்றம் சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது குழந்தையின் தாய் மெர்சி கோசா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிரிழந்த குழந்தையின் உடல் கண்ணகி நகர் சுடுகாட்டில் உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

கண்ணகி நகர் அரசு மருத்துவமனையின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து பாதிக்கப்பட்ட ஸ்டீபன் ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் கண்ணகி நகர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பல மணி நேரமாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. பின்னர் தங்களுக்கு நீதி வேண்டும் எனக் கூறி மருத்துவமனைக்கு வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கண்ணகி நகர் காவல் துறையினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அப்பகுதி மக்கள் யாருடைய பேச்சுக்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு எதிராக சாலையில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் தவெக சோழிங்கநல்லூர் எம்எல்ஏ சரவணமூர்த்தி இதே அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து ரீல்ஸ் மட்டும் எடுத்து போட்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாததை கவனத்தில் எடுத்து போதிய மருத்துவர்களையும், செவிலியர்களையும், பணியாளர்களையும் பணியமர்த்தி இருந்தால் தற்பொழுது ஒரு குழந்தை இறந்து இருக்காது என இறந்த குழந்தையின் உறவினர்களும், அப்பகுதி மக்களும் கடுமையாக குற்றம்சாட்டினர். முற்றுகையிட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் MLA வை சரமாரி கேள்விகளை முன்வைத்ததால் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். கண்ணகி நகர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பணிக்கு வருவதாகவும், மற்ற நாட்களில் பயிற்சி மருத்துவர்கள் தான் இங்கு வரும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாகவும், குறிப்பாக மருத்துவமனையில் பணிபுரியும் ஆயம்மா தான் மருத்துவர்கள் போன்று சிகிச்சை அளித்து வருவதாகவும் சரமாறி குற்றம்சாட்டினர்.

சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய இந்த கண்ணகி நகர் பகுதியில் பெயருக்கு மட்டும் 24 மணி நேரம் அரசு மருத்துவமனை என்று உள்ளதாகவும், இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் பயிற்சி பெற்ற மருத்துவர்களை பணி அமர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் ஒரு குழந்தை இறந்து பிறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்த நிலையில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க போலீசார் கண்ணகி நகர் அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.