தமிழ்நாடு

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள்...தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்ட ஆட்சியர்கள்!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி வாகனங்களின் தரம் குறித்த சோதனை நடைபெற்றது. 


மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளி திறப்புக்கு முன்னதாக, தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், 300க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் சார் ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பங்கேற்று, வேக கட்டுப்பாட்டு கருவிகள், அவசரகால வழிகள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இதில் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. 

இதேபோன்று தருமபுரி மாவட்டத்தில், ஆயிரத்து 130 பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் சேலம் மண்டல துணை போக்குவரத்து ஆணையர் பிரபாகரன் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டன. 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள 60 தனியார் பள்ளிகளை சேர்ந்த, 347 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.  கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் 219 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் முறையான பராமரிப்பு உள்ளதா என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு செய்தார். வாகனங்களில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார்.