தமிழ்நாடு

"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்றவர் கருணாநிதி" சரத்குமார் பேட்டி!

Malaimurasu Seithigal TV

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட இருப்பதாகவும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை 1971 ஆம் ஆண்டு வரவேற்றவர் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி எனவும் திருப்பூரில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சி 17வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 17 வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நடைபெற்றது. இதில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட இருப்பதாகவும் , அதற்கான பணிகளை நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், சமத்துவ மக்கள் கட்சி கொள்கைகள் மற்றும் தீர்மானங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் எனவும் பேசினார்.

தொடர்ந்து சனாதனம் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் அந்த சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை என்றாலும் கருத்து சுதந்திரம் என்பது பொதுவானது எனவும் மாநில அமைச்சர் பேசிய பேச்சுக்கு வட மாநில சாமியார் தெரிவித்த வன்முறை கருத்திற்கு அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? அவர் கைது செய்யப்பட வேண்டும் , வட மாநிலங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் செல்லும்போது உண்டான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். 

மேலும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை 1971 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வரான கருணாநிதி நடைமுறைப்படுத்த கடிதம் எழுதியதாகவும் , அதற்கு காரணம் செலவினங்களை குறைக்க என வலியுறுத்தியதாகவும் தெரிவித்த அவர், தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் உள்ள சட்ட சிக்கல்களை தவிர்த்து அனைவரையும் கலந்து ஆலோசித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்படுவது குறித்த கேள்விக்கு, உலக அளவில் இந்தியா என்ற பெயர் ஆழ்மனதில் பதிவான நிலையில் அதனை மாற்றுவது தேவையற்றது எனக் கூறினார். மேலும் நடிகர் சங்க கட்டிட விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், நடிகர் சங்க நிர்வாகத்தில் தான் தலையிடுவதும் இல்லை, அதனை கண்டு கொள்வதும் இல்லை எனவும் ஆனாலும் இப்போதும் நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், கட்டிடம் வளர்ந்து வர வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.