தமிழ்நாடு

கை மாறுகிறதா ஒரத்தநாடு தொகுதி? அ.தி.மு.க.வின் கோட்டை தகர்கிறதா? "மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" கருத்துக் கணிப்பு முடிவுகள்

சேகர் போன்ற புதிய வேட்பாளர்கள் களம் இறங்குவதும் இத்தொகுதியின் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்..

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் ஒரத்தநாடு தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தின் டெல்டா பகுதியில் அமைந்துள்ள ஒரத்தநாடு, விவசாயத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்ட ஒரு முக்கியமான தொகுதியாகும். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களைக் கண்ட இந்த மண், தற்போது அரசியல் ரீதியாகப் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. 90 சதவீதத்திற்கும் அதிகமான கிராமப்புறங்களைக் கொண்ட இத்தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இத்தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களைப் பொறுத்தவரை, 41 முதல் 60 வயது வரையிலான நடுத்தர வயதுடையவர்கள் 38 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 30 சதவீதமும் உள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 20 சதவீதம் பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் இத்தொகுதியில் ஆண்களை விட சற்றே அதிகமாக உள்ளனர். சாதி ரீதியான அடிப்படையில் முக்குலத்தோர் 50 சதவீதத்துடன் பெரும்பான்மையாக உள்ளனர். ஆதிதிராவிடர்கள் 7 சதவீதமும், முத்தரையர் மற்றும் தேவேந்திர குல வேளாளர்கள் தலா 5 சதவீதமும் வசிக்கின்றனர். முஸ்லிம்கள் சுமார் 2 சதவீதம் பேர் இத்தொகுதியில் உள்ளனர்.

ஒரத்தநாடு தொகுதியின் முழு கருத்து கணிப்பு பற்றி தெரிந்து கொள்ள: இங்கே கிளிக் செய்யவும்

ஒரத்தநாடு தொகுதியின் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் குறையாக உள்ளது. இதனால் இத்தொகுதி இளைஞர்கள் வாழ்வாதாரத்திற்காகச் சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளுக்குப் புலம்பெயரும் நிலை நீடிக்கிறது. நெல் சேமிப்பு கிடங்குகள் இல்லாதது, ஆறுகள் மற்றும் ஏரிகள் தூர்வாரப்படாமல் இருப்பது போன்றவை விவசாயிகளின் பிரதான புகார்களாக உள்ளன. வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதும், தரமான அரசு மருத்துவமனை மற்றும் கூடுதல் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாகும். மேலும், கிராமப்புறங்களுக்கான பேருந்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது மாணவர்களின் பெரும் எதிர்பார்ப்பாகும்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் 47.2 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரன் 32.1 சதவீத வாக்குகளைப் பெற்றார். அப்போது அ.தி.மு.க. 124 வாக்குச் சாவடிகளில் (Booths) பலமாகவும், தி.மு.க. வெறும் 35 சாவடிகளில் மட்டுமே பலமாகவும் இருந்தன. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறி, தி.மு.க. கூட்டணி இத்தொகுதியில் 107 சாவடிகளில் வலுவாக இருந்தது. அப்போது அ.தி.மு.க. 121 சாவடிகளில் பலவீனமாகக் காணப்பட்டது. சுமார் 44 சாவடிகள் Swing நிலையில் இருந்தன.

"கான்சிலிடிக்ஸ்" குழுவின் 2026 தேர்தல் கணிப்பின்படி, ஒரத்தநாடு தொகுதியில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆய்வின்படி அ.தி.மு.க. 38 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடிக்கும் என்றும், தி.மு.க. 35 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையிலான வெற்றி வித்தியாசம் சுமார் 3 முதல் 4 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் இத்தொகுதியில் 11 சதவீத வாக்குகளைப் பெற்றுப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நாம் தமிழர் கட்சி 7 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, அ.தி.மு.க. கூட்டணி 135 - 155 வாக்குச் சாவடிகளில் வலுவாக உள்ளது. தி.மு.க. 105 - 125 சாவடிகளில் மட்டுமே வலுவாக இருக்கிறது. வைத்திலிங்கம் தற்போது தி.மு.க.வில் இருப்பதும், அ.தி.மு.க. சார்பில் சேகர் போன்ற புதிய வேட்பாளர்கள் களம் இறங்குவதும் இத்தொகுதியின் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், அ.தி.மு.க.வின் பாரம்பரிய வாக்கு வங்கி மற்றும் கூட்டணி பலம் இத்தொகுதியில் அவர்களுக்குச் சாதகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அ.ம.மு.க. இத்தொகுதியில் ஒரு முக்கிய சக்தியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.