தமிழ்நாடு

தமிழகத்தில் இலவசமாக செலுத்தப்படுகிறதா ஸ்புட்னிக் தடுப்பூசி,.? நிதியமைச்சர் பதில்.! 

Malaimurasu Seithigal TV

ஸ்புட்னிக் தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து கொடுத்தால் இலவசமாக செலுத்த தயாராக உள்ளோம் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, 

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றும்,கொரோனா இரண்டாம் அலையின் போது உள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டது என்றும், தடுப்பூசி செலுத்திய பகுதிகளில்கொரோனா மூன்றாம் அலை வர வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார். 

மேலும், மதுரை மாவட்டத்தில் 5 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றும், தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்கள் ஒன்றிய அரசிடம் மட்டுமே உள்ளது, யார் யாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்கள் மாநில அரசிடம் ஒன்றிய அரசு வழங்கவில்லை, தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை ஒன்றிய அரசிடம் கோர உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஸ்புட்னிக் தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து கொடுத்தால் இலவசமாக செலுத்த தயாராக உள்ளோம் என்றும், தமிழகத்தில் முதன்முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் திட்டத்தை முன்மாதிரியாக மதுரையில் துவங்க உள்ளது என்றும் தெரிவித்தார். அதோடு, கோவின் இணையதளம் மூலம் கிடைக்கும் தகவல்களை மத்திய அரசே வைத்து கொள்வது  கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், விவரங்களை மாநில அரசுகளிடமும் பகிர வேண்டும் என்றும் தெரிவித்தார்.