vijay with pussy annad  
தமிழ்நாடு

புஸ்ஸி ஆனந்துக்கு அவ்வளவுதான் பவரா…!? இப்படி போற இடமெல்லாம் அனுமதி மறுத்தா எப்படி!? -கலக்கத்தில் விஜய்!

விஜய் -க்கு தமிழகத்திலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, பாண்டிச்சேரியிலும்...

மாலை முரசு செய்தி குழு

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்பரிணாமத்தை அடைந்துள்ளது. முன்பெல்லாம் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புக்கு ஒரு  முக்கியத்துவம் இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் என்ன நடக்கும், ஓட்டுகள் எப்படி மாறும் என்றே சொல்ல முடிவதில்லை. 

தமிழகத்தின் 2026 தேர்தலை இப்படி மாற்றியதில் முக்கிய பங்கு விஜய்க்கே உண்டு. அவரின் வருகைக்கு பிறகு தமிழக அரசியல் சூழல் மாறியது என்பது உண்மை தான் ஆனால் அது எவ்விதத்தில் என்பதுதான், கேள்விக்குறி. கட்சி துவங்கி 2 ஆண்டுகள் தான் ஆகியுள்ள நிலையில் விஜயின் முதல்வர் கனவு, பேராசை என்கின்றனர் சிலர். ஆனால் ஒரு தனிமனிதனின் கனவு மக்களின் உயிரை பறித்தால் அதற்கு எவ்விதத்திலும் நியாயம் கற்பிக்க முடியாது. 

கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். எப்போதும் அவரை பார்க்க மக்கள் ஏராளமான அளவில் கூடுவது வழக்கம். 

ஆனால் கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர்.  மேலும் விஜய் பேசும்போது மைக் சரியாக வேலை செய்யாததால், பின்புறம் இருந்த கூட்டம் முழுவதும் முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்து விட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 41-பேர் உயிரிழந்துவிட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இதற்கு பிறகு விஜயால் மீளவே முடியாது என்றே சொல்லப்பட்டது. 

இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது எழுந்த அதிருப்தி!

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது, கடும் அதிருப்தி நிலவி வந்தது. அதற்கு காரணம் கரூர் சம்பவம் நடந்த அன்று தமிழக வெற்றி கழகத்தின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட அனைவரும், ஓடிச்சென்று ஒளிந்துகொண்டனர்.

இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், கடந்த நவம்பர் 5 -ஆம் தேதிதான் விஜய் பகிரங்கமாக வெளியில் வந்தார். அதற்கு முன்னரும் கூட பனையூர் அலுவலகத்திற்கு வந்து, கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் அழைத்து மன்னிப்பு கோரியிருந்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்கள் யாரையும் சந்திக்கவில்லை.

இந்த நிலையில்தான் மாமல்லபுரத்தில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் “நம்ம குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையிலும் வலியிலும் இவ்வளவு நாள் இருந்தோம். அதனால் தான் அவர்களோடு சேர்ந்து அமைதி காத்து இருந்தோம். ஆனால் இப்படி அமைதி காத்திருந்த நேரத்தில் நம்மை பற்றிய  வெறுப்பு அரசியல், அர்த்தமற்ற அவதூறுகள் நிறைய விஷயங்கள் பரப்பப்பட்டன. இவற்றை எல்லாம் சட்டம் மற்றும் சத்தியத்தை கொண்டு துடைத்து எறிய போகிறோம்” என பேசியிருந்தார்.

தொடர்ந்து அனுமதி மறுப்பு!!

இதற்கு பிறகு, அடுத்தடுத்து விஜய் மக்களை சந்திப்பார் என சொல்லப்பட்டது. அதற்காக தவெக தலைவர் விஜய் சேலத்தில் டிச.4-ம் தேதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தவெக-வினர் சேலம் காவல் ஆணையரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், கார்த்திகை தீபத் திருவிழா, பாபர் மசூதி இடிப்பு தினம் உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி மாநகர காவல் அனுமதி மறுத்துவிட்டது.

பின்னர் உடனடியாக அதே தேதியில் புதுச்சேரியின், காலாப்பட்டு முதல் கன்னியகோவில் வரை ரோடு ஷோ செல்லவும், சோனாம்பாளையத்தில், வாகனத்தில் இருந்தபடி விஜய் பேசவும் முடிவெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதற்கு அனுமதி கேட்டு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடமும், டி.ஜி.பி., அலுவலகத்திலும் த.வெ.க., நிர்வாகிகள் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி மனு கொடுத்தனர். இருப்பினும் இது குறித்து போலீசார் எந்த பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் ரோடு ஷோக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமியை தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் சந்தித்து ரோடு ஷோக்கு அனுமதி கோரிய நிலையில், “புதுச்சேரி சுற்றுலாத்தளம் என்பதாலும், வார இறுதியில் அதிகமான மக்கள் கூடுவர் என்பதாலும்” பாதுகாப்பு காரணங்களால் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆனந்துக்கு அவ்வளவுதான் செல்வாக்கா!?

புதுச்சேரியில், 5,000 ஓட்டுகள் உள்ள சட்டமன்றத் தொகுதி தான் 'புஸ்ஸி தெரு'. இந்த தொகுதியில் புதுச்சேரி கண்ணன் தொடங்கிய புதுவை மாநில காங்கிரஸ் சார்பில், 2006-ம் ஆண்டு தேர்தலில் நின்று 2,500 ஓட்டுகள் வாங்கி ஜெயித்து எம்.எல்.ஏ-வான புஸ்ஸி ஆனந்த்.விஜய் ரசிகர் மன்ற தலைவர், ரியல் எஸ்டேட், பைனான்ஸ் என பிஸியாக இருந்த  புஸ்ஸி ஆனந்த். தமிழக வெற்றிக் கழகம் துவங்கிய பிறகு பெரும் ஊடக வெளிச்சத்தை பெற்றார். 

ஆனால் அவருக்கு பாண்டிச்சேரி பாஜக கட்சியினர் மத்தியில் நல்ல செல்வாக்கு இருப்பதாக கூறப்பட்டாலும், தனது கட்சியின் தலைவரின் ரோடு ஷோ -க்கே அனுமதி கிடைக்கப்பெறாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் -க்கு தமிழகத்திலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, பாண்டிச்சேரியிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தவெக -தன் மீதான நம்பகத்தன்மையை இழந்து நிற்பதாகவே சில விமர்சகர்கள் கூறுகின்றனர். ஒருவேளை இந்த நிலை நீடித்தால் அது விஜய்க்கு மிக பெரும் பின்னடைவாகவே இருக்கும் என்கின்றனர் சிலர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.