தமிழ்நாடு

'பொறுத்தது போதும்'.. இனி டிஃபென்ட் ஆட்டம் இல்ல.. அட்டாக் மட்டும் தான்.. மீண்டும் ஒன்று கூடும் அதிமுக அதிருப்தி அணி!? என்ன நடக்கிறது?

கட்சி வெற்றி பெற்றிருந்த தொகுதிகளிலேயே வாக்காளர்களின் ஆதரவைத் தக்க வைக்க முடியாத நிலை, நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Muthu Lakshmi

அதிமுகவில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தோல்வியை தொடர்ந்து மீண்டும் உட்கட்சி தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பொது தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்த நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக அதிருப்தி தெரிவித்திருந்த நிர்வாகிகள் மீண்டும் அணி திரள்வது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சென்னை இல்லத்தில் கடந்த 2 நாட்களாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஆலோசனை தற்போது 3வைத்து நாளாக தொடர்ந்து வருகிறது. இதில்  முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் உட்பட சுமார் 25 முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனைகளில் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தொடர் தோல்விகளுக்கான காரணங்கள், தற்போதைய தலைமை மீதான அதிருப்தி, நிர்வாகிகளின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் மீது அதிருப்தியை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொது தேர்தலில் அதிமுக மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு தொகுதியின் MLA-களும் தங்களது பதவியை 20 நாட்களில் ராஜினாமா செய்து, தவெக- வில் இணைந்தனர். பின்னர் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த முடிவு அதிமுகவுக்குள் தலைமை குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. குறிப்பாக, கட்சி வெற்றி பெற்றிருந்த தொகுதிகளிலேயே வாக்காளர்களின் ஆதரவைத் தக்க வைக்க முடியாத நிலை, நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பொது தேர்தலில் மூன்றாவது இடம், 6 அதிமுக MLA-கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெக வில் இணைந்தது மற்றும் இடைத்தேர்தல் தோல்வி ஆகியவை கட்சியில் பல்வேறு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக அதிருப்தி அணியினர் தங்களது நிலைப்பாட்டை வலுப்படுத்தக்கூடும் என்றும் தெரிகிறது. இதற்கிடையே, வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான அணியினர் சட்டமன்றத்தில் தனிக் குழுவாகச் செயல்படுவது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

2026 பொது தேர்தலில் 47 இடங்களை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, தேர்தலுக்கு பின் இரு பிரிவுகளாக பிரிந்தது. எஸ்.பி வேலுமணி மற்றும் சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் ஒரு தரப்பும், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஒரு தரப்பும் என உட்கட்சி பிளவு ஏற்பட்டது. அதையடுத்து கட்சியின் பல்வேறு புதிய மாவட்டக் கழகச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகளின் பொறுப்புகளும் பறிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உட்கட்சி மோதலை மேலும் அதிகரித்தது.

இதற்கு முக்கிய காரணமாக சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-கட்சிக்கு ஆதரவாக சி.வி. சண்முகம் தரப்பு MLA-க்கள் ஆதரவு அளித்தது தான் என்று சொல்லப்பட்டது. இதன் மூலம் 144 எனும் பெரும்பான்மை ஆதரவுடன் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைத்தது. அதையடுத்து இதில் சி.வி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி ஆதரவாளர்கள், அதிமுக தலைமையான எடப்பாடி பழனிசாமியிடம் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுத்ததாக சொல்லபட்டது. 

மேலும் “சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு ஈபிஎஸ் தான் காரணம்" என்றும் சி.வி சண்முகம் குற்றம் சாட்டினார். சி.வி.சண்முகம், “இது சாதாரண தோல்வி அல்ல; கட்சியின் வாக்கு வங்கி சரிந்து கொண்டிருப்பதற்கான எச்சரிக்கை” என்றும் அப்போது குறிப்பிட்டிருந்தார். இந்த தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்ந்து, கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி செவி கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் அதிமுகவில், இந்த ஆலோசனைகள் அடுத்தகட்டமாக எந்தத் திசையில் நகரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிருப்தி அணியினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படையாகத் தீவிரப்படுத்துவார்களா அல்லது கட்சிக்குள் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா என்பதே தற்போதைய அரசியல் கவனமாக உள்ளது. SP வேலுமணி மற்றும் CV சண்முகம் தரப்பினர் அதிருப்தி அணி மீண்டும் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவது எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு அழுத்தத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.