தமிழ்நாடு

அரசியலில்.. விஜய்யுடன் கைகோர்க்கிறாரா திரிஷா? "ஜெயலலிதா இடத்தைப் பிடிப்பார்" - ரசிகர் சொன்ன சுவரசியான காரணம்!

"அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தான் இது தெரியும். அவரது ஆளுமையை நாங்கள் பல இடங்களில் பார்த்துள்ளோம்.."

Muthu Lakshmi

தமிழகத்தில் நடிகர்களின் பெயரில் அவர்களது ரசிகர்கள் நற்பணி மன்றத்தை தொடங்குவது ஒரு வழக்கமாக மாறி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் நற்பணி இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நெல்லையை தலைமையிடமாக கொண்டு நடிகை திரிஷாவின் பெயரில் நற்பணி இயக்கத்தை நெல்லையை சேர்ந்த ராஜகோபால் என்பவர் இன்று தொடங்கி வைத்துள்ளார். தொடர்ந்து அவர் இயக்கத்தின் பெயர் மற்றும் லோகோவை வெளியிட்டார். அதன்படி ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்று புதிய இயக்கத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. லோகோவில் நடிகை திரிஷா, முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா போன்ற தோற்றத்தில், கும்பிட்டபடி நிற்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த நற்பணி இயக்கத்தை தொடங்கியுள்ள ராஜகோபால், ஏற்கெனவே அரசியல் அனுபவம் உள்ளவர் என்றும் சொல்லப்டுகிறது.

கடந்த 1996 முதல் 1998-ம் ஆண்டு காலகட்டத்தில் ம.தி.மு.க.வில்  தச்சநல்லூர் பகுதி வட்ட செயலாளராக இவர் பணியாற்றியுள்ளார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் தச்சநல்லூர் மண்டல நிர்வாகியாகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது எந்தவொரு அரசியல் கட்சியிலும் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், நடிகை திரிஷாவின் தீவிர ரசிகர் என்பதால், சினிமாவை கடந்து திரிஷா பொதுவாழ்விலும், அரசியலிலும் ஈடுபட வேண்டும் என்று விருப்பம் கொண்டு இந்த இயக்கத்தை தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜகோபால் மேலும் கூறியதாவது, “ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் நடக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார்.” ஜெயலலிதாவின் ஆளுமையை பார்த்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்கள் கடமையை சரியாக செய்தார்கள். கடமை தவறிய அதிகாரிகளை ஜெயலலிதா விட்டுவைக்கவில்லை.

அவர்கள் தாங்கள் செய்த தவறை உணரும் வகையில், மிக டம்மியான பதவியில் நியமித்து தண்டனை வழங்கினார். தமிழகத்தை பொறுத்தமட்டில் ஜெயலலிதா போன்று ஒரு ஆளுமை தேவைப்படுகிறது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மிக சிறப்பாக செயல்படுகிறது. இருந்தாலும் விஜய்யுடன் இணைந்து திரிஷாவும் அரசியலில் பயணித்தால் ஜெயலலிதா ஆட்சியை போன்று ஒரு ஆட்சி நமக்கு கிடைக்கும். ஜெயலலிதாவை போன்று ஒரு ஆளுமை திரிஷாவுக்கு உள்ளது.

அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தான் இது தெரியும். அவரது ஆளுமையை நாங்கள் பல இடங்களில் பார்த்துள்ளோம். ஆளுமை என்ற அடிப்படையில் ஜெயலலிதாவின் வழித்தோன்றலாக திரிஷாவை நாங்கள் பார்ப்பதால் அவருக்கு இளைய புரட்சித்தலைவி என்ற பட்டத்தை சூட்டி உள்ளோம்.

அவரது அரசியல் பயணம் தமிழகத்துக்கு தேவைப்படுகிறது. அந்தவகையில் முதற்கட்டமாக இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவையை தொடங்கி உள்ளோம். இதன்மூலம் தற்போது மக்கள் நல பணிகளை செய்ய உள்ளோம். எங்களது மக்கள் நல பணிகள் மூலம் திரிஷா, முதல்-அமைச்சர் விஜய்யுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அவ்வாறு இருவரும் இணைந்து அரசியலில் பயணிக்கும் போது தமிழகத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்ற பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கப்படுவது குறித்த அறிவிப்பு நெல்லை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அமைப்பு திரிஷாவின் ஒப்புதலுடன் தொடங்கப்படுகிறதா? என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை திரிஷாவின் பெயரில் நெல்லையில் தொடங்கப்படும் இந்தப் புதிய நற்பணி இயக்கத்தின் செயல்பாடுகள் என்னவாக இருக்கும்?, பொதுமக்களுக்கான நலத்திட்ட பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும்? அரசியல் ரீதியான நகர்வுகள் ஏதேனும் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. இதற்கு முன் மதுரை மாவட்த்தில் திரிஷா நற்பணி மன்றம் ஒன்று தொடங்கபட்டு, விஜயை வரவேற்று ஓட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் பேசுபொருளானது குறிபிடத்தக்கது

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்