நடந்து முடிந்த 2026 பொது தேர்தலில் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர். இவர் தனது MLA பதவியை ராஜினாமா செய்து, தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
விஜயபாஸ்கர் உட்பட அதிமுகவில் இருந்து 6 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து, தவெக-வில் இணைந்தனர். இதில் குதிரைப் பேரம் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து, இதற்கான புகார் மனுக்களையும் ஆளுநரிடம் வழங்கியுள்ளது அதிமுக. இந்நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதியிலும், பொது தேர்தலில் வெற்றி பெற்று, பின் ராஜினமா செய்து தவெக-வில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இடைத்தேர்தலில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். இதனால் அடுத்தடுத்த இடைத்தேர்தலிலும் ராஜினாமா செய்த அதே வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அரசியல் வட்டாரத்தில் சொல்லப்பட்டது.
அந்த வகையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதே தொகுதியில் வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதுவரையில் விராலிமலை தொகுதிக்கு இடைத்தேர்தல் குறித்து அறிவிப்புகள் வெளியாகவில்லை. தேர்தல் அறிவிப்புகள் வெளியானால் விராலிமலை இடைத்தேர்தலில் தவெக சார்பில் சி. விஜயபாஸ்கர் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.
விராலிமலை சட்டமன்ற தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஜயபாஸ்கர் கலந்து கொண்டது கவனம் பெற்றது. மேலும் தவெக அமைச்சர்களுக்கு தனது சார்பில் நினைவு பரிசுகளை வழங்கினார். கடந்த மாதம், புதுக்கோட்டை விராலிமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 1384 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் வேளாண் கருவிகள் உள்ளிட்ட 4.37 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். அதே மேடையில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அந்த விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், விஜயபாஸ்கர் குறித்தும் இடைத்தேர்தல் வாய்ப்பு குறித்து ஒரு ஹிண்ட் கொடுத்திருந்தார். அதில் விஜயபாஸ்கர் எல்லா வித்தையும் தெரிந்தவர், அதனால் தான் இந்த தொகுதியில் களம் காண போகிறார்… அதுமட்டுமல்ல வெற்றியும் காணுவார் என தெரிவித்திருந்தார். மேலும் “முதல்வர் பின்னால் நின்று பணியாற்ற போகிறார்” என்றும் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் அவர் இடைத்தேர்தலில் களம் காணுவார் விஜயபாஸ்கர் என்பது பரவலாக பேசப்பட்டது.
தற்போது அந்த கணிப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு ஹிண்ட் கிடைத்துள்ளது. கடந்த ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைக்க முதலமைச்சர் விஜய் நேற்று புதுக்கோட்டை சென்றிந்தார். மேலும் ரோடு ஷோவும் மேற்கொண்டார். இது வெறும் அரசு நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல் இடைத்தேர்தலை கணக்கில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ரோட்-ஷோ என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியிலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
5 மாதங்களை கடந்த தவெக ஆட்சி சில துறைகளில் சவால்களை சந்ததி வருகிறது. மின்துறை, சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் விலைவாசி உயர்வு போன்ற சவால்களை எதிர்கொண்டு வரும்நிலையில், அதற்கான விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. இதனால் தவெக அரசுக்கு எதிராக அதிருப்தி உருவாகியுள்ளது என களத்தில் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அரசுக்கான ஆதரவு எப்படி உள்ளது என்பதை அறிவதோடு, இடைத்தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் முதலமைச்சர் விஜய், தாமாகவே களத்தில் இறங்க உள்ளாராம். அதன்படியே, நவம்பர் 2ம் தேதி புதுக்கோட்டையிலும், 3ம் தேதி ஈரோட்டிலும் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டார்.
இதற்கிடையில் தவெக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என என்றும் பேச்சுக்கள் நிலவி வந்தது. அந்த வகையில் இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைத்து வெற்றி பெற்றால் முன்னாள் அமைச்சர்களுக்கு தவெக அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் விஜயபாஸ்கர் முனைப்போடு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.