தமிழ்நாடு

குடியரசு தலைவர் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு சென்னை வருகை தர உள்ளதாக தகவல்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு ஜூலை முதல் வாரத்தில் சென்னை வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil Selvi Selvakumar

குடியரசு தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அப்போது அவருடன் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உடன் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் திரௌபதி முர்மு ஜூலை முதல் வாரத்தில் சென்னை வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றி பெற எதிர்கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், பாமக தலைவர் ராமதாஸ் ஆகியோரை சந்தித்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் தமக்கு ஆதரவு கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் உள்ள பல மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரவும் திரௌபதி முர்மு திட்டமிட்டுள்ளார். 

இதற்கான ஏற்பாடுகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பாஜக குழுவின் உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக, இன்றைய வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.