தமிழ்நாடு

ஜல்லிக்கட்டை விளையாட்டாக அறிவிக்க சட்டநடவடிக்கை-அமைச்சர் மெய்யநாதன்!

மதுரை அலங்காநல்லூரில் உலகத்திலேயே இல்லாத அளவிற்கு ஜல்லிக்கட்டு மைதானம் சிறப்பாக அமைக்கப்பட உள்ளது.

Malaimurasu Seithigal TV

புதுக்கோட்டை, இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

விலையில்லா மிதிவண்டிகள்

இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 565 விலையில்லா மிதிவண்டி வழங்கும் இவ்விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினர். மேலும் பள்ளியில் நூலகம் மற்றும் ஆய்வு கூடத்திற்கான கட்டிடங்களை திறந்து வைத்தனர்.

மாணவிக்கு பாராட்டு

பின்னர் நடந்து முடிந்த 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகள் கலந்து கொண்டன. இந்த போட்டியின் தேசியக்கொடி அணிவகுப்பில் குவாட்டிமேல் (Guatemala) நாட்டிற்காக, இப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி ஜோதிகா அந்த நாட்டு தேசியக்கொடியை ஏந்தி சென்றார். எனவே, பள்ளி மாணவி ஜோதிகாவை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் பாராட்டினர்.

ஜல்லிக்கட்டை விளையாட்டாக்க சட்டம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்,மதுரை அலங்காநல்லூரில் உலகத்திலேயே இல்லாத அளவிற்கு ஜல்லிக்கட்டு மைதானம் சிறப்பாக அமைக்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டை விளையாட்டாக கொண்டு வருவதற்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்குண்டான சட்ட நடவடிக்கைகள் முடிந்த பிறகு, தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை விளையாட்டாக கொண்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதற்குண்டான சட்ட விதிகளை ஏற்படுத்துவதற்கு காலதாமதம் ஆகும் என்றார்