"HIV.. கல்யாணம்.." பெண் யூடியூபர் மீது அவதூறு... நக்கீரன் பிரகாஷ் கைது - பத்திரிகையாளர் எழுப்பும் சந்தேகம்! 
தமிழ்நாடு

"HIV.. கல்யாணம்.." பெண் யூடியூபர் மீது அவதூறு... நக்கீரன் பிரகாஷ் கைது - பத்திரிகையாளர் எழுப்பும் சந்தேகம்!

கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் நிறுவன ஊடகவியலாளர் தாமோதரன் பிரகாஷிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாலை முரசு செய்தி குழு

நக்கீரன் நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் தாமோதரன் பிரகாஷ் இன்று காலை சென்னை, ஆதம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

58 வயதான இவர் 38 வயது பெண் யூடியூபர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், யூடியூப் சேனலில் பணியாற்றிவரும் பெண் குறித்து அவர் பேசிய கருத்துகளுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 38 வயது மதிக்கத்தக்க பெண் தனி நபர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக பணி செய்து வருவதாகவும் வார பத்திரிகையின் நிருபர் தாமோதரன் பிரகாஷ் என்பவர் பெயர் தெரியாத ஒரு நெறியாளருடன் அவர் பற்றி அவதூறாகவும், அவருக்கு HIV உள்ளது என்றும் யூடியூப் சேனல் உரிமையாளரை கல்யாணம் செய்யவுள்ளார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவரது புகைப்படத்தை காண்பித்து, தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பொய்யாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் வீடியோ பதிவிட்டு கடந்த ஜனவரி-2026 மாதம் "கிங் 24 X 7" என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டு, பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டுள்ளதால், மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாலதி என்பவர் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில், S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act), தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்." எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள தாமோதரன் பிரகாஷிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கைது நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டித்துள்ளது. இதுகுறித்து "மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கைது। புகாருக்கும் நடவடிக்கைக்கும் 8 மாத இடைவெளி ஏன்? அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று எண்ணத் தோன்றுகிறது." என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில், "பத்திரிகைத்துறையில் கால் நூற்றாண்டிற்கு மேல் பயணித்து வரும் தாமோதரன் பிரகாஷ், நக்கீரன் புலனாய்வு இதழில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

நக்கீரன் இதழ் வெளியிட்ட பல புலனாய்வு செய்திகளில் தாமோதரன் பிரகாஷ் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. சங்கரராமன் கொலை வழக்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் யாருக்கும் அஞ்சாமல் தாமோதரன் பிரகாஷ் அவர்கள் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கைகள் பல உண்மையை வெளிக்கொண்டு வந்தது.

இன்று காலை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தாமோதரன் பிரகாஷ் அவர்களின் இல்லத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

கைது தொடர்பாக காவல்துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் ஒரு யூடியூப் சேனலில் பெண் யூட்யூபர் ஒருவர் குறித்து தாமோதரன் பிரகாஷ் தெரிவித்த அவதூறான கருத்துக்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகார வர்க்கத்தின் தவறுகளை யாருக்கும் அஞ்சாமல் தைரியமாக சுட்டிக்காட்டி விமர்சித்து வரும் தாமோதரன் பிரகாஷ், சுமார் 8 மாதங்களுக்கு முன் யூட்யூபில் பேசியதற்காக எந்த வித முன் விசாணையுமின்றி தற்போது கைது செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

தாமோதரன் பிரகாஷ் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், தொடர்புடைய நபரிடம் சட்டப்பூர்வமாக விளக்கம் கேட்காமல், எந்தவித விசாரணையும் நடத்தாமல் நேரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் தமிழக அரசை வலியுறுத்துகிறது." எனக் கூறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்