Anbil Mahesh arrest - Sekar Babu statement 
தமிழ்நாடு

"இந்த ஆட்சி எல்லை மீறிப் போகிறது.. நீதி வீழும் அறம் வெல்லும்" - கைதான அன்பில் மகேஷ்! தவெக அரசின் 'பழிவாங்கல்' என சாடிய சேகர்பாபு

இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அன்பில் மகேஷ் பொறுப்பானவர். அவர் தாத்தா காலத்திலிருந்து, அப்பா காலத்திலிருந்து தொடர்ந்து அரசியலில் பயணிப்பவர்.

Vinvizhi Leninton

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி ஊழல் செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் நேற்று (26.10.2026) காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் விசாரணைக்கு பிறகு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால், பரிசோதனை முடிந்த பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லாமல் திரும்ப காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அழைத்து வரப்பட்டுள்ளார். இதற்கிடையே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சேகர்பாபு காவல்துறையினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், "இந்த ஆட்சி எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது" என்று தவெக-வை கடுமையாக சாடியுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பு:

இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த சேகர் பாபு, "சுற்றி சுற்றி வந்து மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கே கொண்டு வந்திருக்கின்றார்கள். இந்த ஆட்சி நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை, சட்டத்தையும் மதிப்பதில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. யாரையுமே அனுமதிக்கவில்லை. பத்திரிகையாளர்களைக்கூட அனுமதிக்கவில்லை. இந்த ஆட்சி எல்லை மீறிச் சென்றுகொண்டிருக்கின்றது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த அடக்குமுறைகளைக் கடந்துதான் திராவிட முன்னேற்றக் கழகம் 78 ஆண்டுகளைக் கடந்திருக்கின்றது. ஆகவே, இதுபோன்ற அடக்குமுறைகள் தொடருமேயானால், எவ்வளவு தூரம் தொடர்ந்தாலும் அதைச் சட்டப்படி சந்திப்பதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் நிற்கும்.

பத்திரிகையாளர்களான நீங்களே பார்த்துக்கொண்டிருந்தீர்கள். முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் முடிந்த பிறகு, நேரடியாக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதாகத்தான் வண்டியை எடுத்தார்கள். நீதிமன்றத்தில் நீதிபதியும் காத்திருக்கிறார், வழக்கறிஞரும் காத்திருக்கின்றார். சுற்றிச் சுற்றி வந்து மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்திற்குக் கொண்டுவந்து, உள்ளே என்ன நடக்கின்றது என்று வெளியே இருக்கின்ற ஊடகங்களுக்கும் தெரியாது, எங்களுக்கும் தெரியாது.

தனிமையில் அவரை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே விசாரித்து முடித்த பிறகு, மருத்துவத் தகுதிச் சான்றிதழ் (Medical Fitness Certificate) வாங்கிய பிறகு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதுதான் வாடிக்கை. இந்த ஆட்சியில் அனைத்துமே சட்டத்திற்கு புறம்பாகவும், நீதிக்கு புறம்பாகவும், வேண்டுமென்றே அலைக்கழிப்பதற்காகவும் இப்படி சுற்றிச் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள். நிச்சயம், கலைஞர் பாணியில் சொன்னால், நீதி வீழும், அறம் வெல்லும்" என்று ஆளும் அரசினை காட்டமாக விமர்சித்தார்.

இதனைத்தொடர்ந்து, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இதைப் பார்க்கிறீர்களா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, "இன்றைக்கு காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. இரண்டு வயதுப் பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கிட்டத்தட்ட 17-ஆம் தேதி நடந்த கொடூரம் தொடர்பாக இன்றைக்குத்தான் கைது நடவடிக்கையே தொடங்கியிருக்கின்றது.

அதுவும் திராவிட முன்னேற்றக் கழக ஐடி விங்கில் இது பதிவிடப்பட்ட பிறகுதான், அந்தக் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை நடந்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஏன் அதை மூடி மறைத்தார்கள்? என்பது இன்றைக்குத்தான் தெரிகின்றது. சம்பந்தப்பட்டவர் தவெக கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் இதை மூடி மறைக்க முயற்சித்தார்கள். ஊடகங்களும் மருத்துவமனையும் இதை வெளிக்கொண்டுவந்ததால், இன்றைக்குக் கைது நடவடிக்கை தொடர்ந்து இருக்கின்றது.

இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அன்பில் மகேஷ் பொறுப்பானவர். அவர் தாத்தா காலத்திலிருந்து, அப்பா காலத்திலிருந்து தொடர்ந்து அரசியலில் பயணிப்பவர். அவர் எங்கும் ஓடி ஒளிந்துகொள்ள மாட்டார்; நாட்டை விட்டு வேறு நாட்டிற்குச் சென்றுவிட மாட்டார். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு தந்தார். அதன் பிறகும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைப் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்லாமல் வேறு என்ன பெயர் வைப்பது?

நிபந்தனைகளைப் பின்பற்றிக் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை தவெக ஐடி விங் சுட்டிக்காட்டியிருக்கிறதே? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "நிபந்தனை என்பது ஜாமீனைத்தான் ரத்து செய்திருக்கிறார்கள். அவரைக் கைது செய்யச் சொல்லி எங்காவது உத்தரவிட்டிருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது" என்று கூறினார் திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்