தமிழ்நாடு

“உங்க வேலையை நீங்க பாருங்க..” - 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் கர்நாடக CM கருத்து! இரு மாநில முதல்வர் சந்திப்பா?

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் நான் எந்த வகையிலும் தலையிட முடியாது

Muthu Lakshmi

கர்நாடக மாநிலத்தில் சாமராஜநகர் மாவட்டத்தில் மரியா மங்களா பீட் பகுதியில் வனத்துறையினர் ஆகஸ்ட் 16ம் தேதி நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த என்கவுண்டர் சம்பவத்தால் கோபமடைந்த பொதுமக்கள், ஹனூர் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் வேட்டையில் ஈடுபட்டதாகவும், அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி தெரிவித்திருந்தார். இது குறித்து தமிழக சட்டமன்றத்தில் விவாதங்கள் மற்றும் கண்டனங்களும் எழுந்தன. அதையடுத்து சட்டமன்ற  எதிர்க்கட்சியினர்  தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் CBI விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கு CBI-க்கு மாற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.  

தற்போது செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமார் இது குறித்து பதிலளித்துள்ளார். "கர்நாடக வனத்துறையினரால் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்" என எழும் கண்டங்கள் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “இது கூட்டாட்சி அமைப்பு.. எந்த மாநிலத்தின் நிர்வாகத்திலும் மற்றொரு மாநிலம் தலையிடக் கூடாது" என்றார். "பன்னீர்செல்வமாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு அடிப்படை நாகரீகம் இருக்க வேண்டும். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் நான் எந்த வகையிலும் தலையிட முடியாது” என்றும் “ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கென தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. இதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய மாநிலத்தை எப்படிப் பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்” என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

மேலும் “அவர்கள் அவர்களது வேலையை செய்யட்டும்; நாங்கள் எங்களது வேலையை செய்கிறோம். அவர்களின் நிர்வாகத்தில் நான் தலையிட விரும்பவில்லை. நம் மாநிலத்தின் இறையாண்மையை நாம் பாதுகாக்க வேண்டும்.” என்றும் பேசியிருந்தார். முதல்வர் விஜய் விசாரணை கோரியது குறித்து பேசிய கர்நாடக முதல்வர் “அது குறித்து நான் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை” என்றும் “அவர்கள் அவர்களது வேலையைச் செய்யட்டும்; நாங்கள் எங்களது வேலையைச் செய்கிறோம்” என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து நாளை தென் மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு சென்னை கோளத்தில் நடைபெற உள்ளது. இதில் தென் மாநிலங்களின்  முதல்வர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.  இந்த மாநாட்டில்  தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு , கர்நாடகா முதல்வர் டி கே சிவகுமார், கேரளா முதல்வர் சதீஷன் மற்றும் தெலுங்கானா முதல்வர்  ரேவந்த் ரெட்டி  மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் தென் மாநிலங்களின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

பின்னர் ஆகஸ்ட் 20 அன்று கர்நாடக முதல்வர் டி கே சிவகுமார் மற்றும் தமிழக முதல்வர் விஜய் ஆகியோர் சந்தித்து இரு மாநில பிரச்சனைகளான காவிரி நதிநீர், மேகதாது பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்