Karur Stampede issue and Ramalinga Reddy speech  
தமிழ்நாடு

“கரூரில் 41 பேர் இறந்தபோது நாங்கள் பேசினோமா?” - தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்.. கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

எங்கள் மாநிலத்தை பாதுகாத்துக் கொள்ள எங்களுக்கு தெரியும்...

Mahalakshmi Somasundaram

கர்நாடக வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தின் எதிர்ப்புக்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, “கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நாங்கள் ஏதாவது பேசினோமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நேற்று தமிழக சட்டப்பேரவையிலும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை அதிகரிக்க கர்நாடக அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தலையிடுவது தேவையற்றது என்றும், “எங்கள் மாநிலத்தை பாதுகாத்துக் கொள்ள எங்களுக்கு தெரியும்” என்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்திருந்தார்.

கரூர் சம்பவத்தை குறிப்பிட்ட அமைச்சர்

இந்த நிலையில், கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியும் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட விவகாரம். அவர்கள் தங்கள் வேலையை பார்க்கட்டும். எங்கள் விவகாரங்களில் அவர்கள் ஏன் தலையிட வேண்டும்?” என கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தில் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார். “தமிழக சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் முதல்வர் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அது குறித்து நாங்கள் ஏதாவது பேசினோமா?” என அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் கர்நாடக மாநிலத்திற்குள் நடைபெற்ற விவகாரம் என்றும், அதனை மாநில அரசு பார்த்துக்கொள்ளும் என்றும் ராமலிங்க ரெட்டி கூறினார். மேலும், “எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் எங்கள் கன்னடர்கள்தான். அவர்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம்” என அவர் தெரிவித்தார். தமிழர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் கர்நாடக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அதற்கு வனத்துறை அமைச்சர் கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டியிருப்பது இரு மாநில அரசியல் வட்டாரங்களிலும் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்