Udhayanidhi Stalin 
தமிழ்நாடு

“3 தமிழர்கள் கொலை.. முறிக்கப்பட்ட விலா எலும்புகள் ”.. கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்டாரா முதல்வர் - சட்டசபையில் உதயநிதி கேள்வி!

மூவரையும் அருகருகே நிற்க வைத்து திட்டமிட்டு சுட்டுக் கொன்றதாக பிரேதப் பரிசோதனை முடிவுகள்...

Mahalakshmi Somasundaram

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் ஹானூர் வட்டத்திற்குட்பட்ட காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிகாலை வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் டோமராபாளையம் மற்றும் மரியமங்களம் கிராமங்களைச் சேர்ந்த அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), குமார் (36) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மூவரும் மான்களை வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்குள் சென்றதாகவும், அவர்களை வனத்துறையினர் தடுக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கர்நாடக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மூவரும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அவர்களின் விலா எலும்புகள் முறிக்கப்பட்டிருந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போது வெளியாகியுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மூவரும் சித்ரவதை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகவும், அவர்களின் விலா எலும்புகள் முறிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மூவரையும் அருகருகே நிற்க வைத்து திட்டமிட்டு சுட்டுக் கொன்றதாக பிரேதப் பரிசோதனை முடிவுகள் தெரிவிப்பதாகவும் உதயநிதி குறிப்பிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய அவர், அண்மையில் நடைபெற்ற தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை சந்தித்தபோது, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தாரா என்றும் கேள்வி எழுப்பினார். தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கை தொடர்பான தகவல்களை முன்வைத்து உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளது மீண்டும் இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்