தமிழகத்தின் இருபெரும் அரசியல் அலைகள் அடுத்தடுத்து ஓய்ந்தபோது, அதுவரை தங்கள் அதிகாரத்திற்கோ,, அங்கீகாரத்திற்கோ காத்திருந்தவர்கள் எல்லாம், கோட்டைக்குள் செல்லும் வழியை தேடலாயினர்.
கருணாநிதி-ஜெயலலிதா இவர்கள் இருவர் மீதும் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதும், கொள்கை தெரிந்து அரசியல் செய்தவர்கள். காரணம் இவர்கள் அரசியல் கற்றுக்கொண்ட இடமே, பெரியார், அண்ணா.
வெற்றிடத்தை நிரப்ப வந்தாரா கமல்?
ஜெயலிலதா மறைவுக்கு பிறகு மக்களிடம் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பல பேர் அரசியலில் குதித்தனர். அந்த சமயத்தில் தான் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை தீவிரமாக (2017) துவங்கினார். ஆனால் காலப்போக்கில் சில பல காரணங்களால் அவரால் அரசியலில் நீடிக்க முடியவில்லை.
ஆளுங்கட்சியின் மீதான விமர்சனங்களை ட்விட்டரில் தொடங்கிய கமல், பின்னர் முழு அரசியல்வாதியாகவே களமிறங்கினார். அதன்பிறகு அவர் மக்களைத் தொடர்ந்து சந்தித்து வந்தார். ஆனால் அரசியலின் மிகப்பெரும் மூலப்பொருள் பேச்சு. நல்ல பேச்சு வல்லமை வாய்க்கப்பெற்றாலும் தனது பூடக மொழி தன்மையால் அவர் சொல்லும் கருத்துக்கள் மக்களை சென்று சேரவில்லையோ என்ற கருத்தும் நிலவுகிறது. தி.மு.க-வையும், அ.தி.மு.க-வையும் நேரடியாக விமர்சித்த கமல் பி.ஜே.பி-யை அதுபோல விமர்சிக்கத் தயங்குகிறார் தெளிவற்ற அரசியல் கொள்கையையும் கைகொண்டுள்ளார் என பல விமர்சனங்கள் வந்தன.
இந்த நிலையில்தான் கடந்த 2024 -ம் ஆண்டு மேடையிலே “தான் ஒரு தோற்று போன அரசியல்வாதி” என உருக்கமாக பேசியிருப்பார்.
அரசியல் களத்துக்கு வரும்போது, "தி.மு.க, அ.தி.மு.க என்கிற ஊழல் கட்சிகளைப் புறந்தள்ளுவோம்” என்றார் கமல்ஹாசன். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க-வுடனேயே அவர் கூட்டணியாகக் கைகோர்த்து மாநிலங்களவை எம்.பி -ஆக அறிவிக்கப்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
கட்சி ஆரம்பித்த சில நாட்களில் முன்னாள் அரசியல்வாதிகள், ஓபிஎஸ், எச்.ராஜா, ஆகியோர் டிவி -இல் பேசுவதை பார்த்து எரிச்சல் அடைந்த கமல் டார்சால் டிவி -யை உடைப்பது போன்றொரு விளம்பர பிரச்சாரத்தை அன்றைக்கு மக்கள் நீதி மய்யம் வெளியிட்டது. ஆனால் அவரின் அந்த செயலே பின்னாளில் அவருக்கு ஆப்பாக அமையும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆரம்ப காலங்களில் திமுக-வை கடுமையாக எதிர்த்த கமல் கடந்த தேர்தலில் திமுக -வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து ராஜ்ய சபா எம்.பி -ஆகவே மாறிவிட்டார். ஆனால் பலர் கமல் தனது வாழ்க்கை சாபல்யத்தை அடைந்துவிட்டார், எனக் கூறி வருகின்றனர்.
விஜய்யின் அரசியல் பிரவேசம்
கமலைப் போலவே திமுக -வை எதிர்த்துதான் விஜய் -ம் கட்சி ஆரம்பித்துள்ளார். ஆனால் அவருக்கு எழும் ஆதரவும், மக்கள் கூட்டமும் தன்னெழுச்சியானவை. மேலும் அவர் சி.எம் என்ற கனவோடு தேர்தலை சந்திக்கிறார். தங்களது கொள்கை என்ன? சித்தாந்தம் என்ன? என்பதில் மிக உறுதியாக உள்ளார். கடந்த திருவாரூர் பரப்புரையில் எல்லாம் திமுக -வை கிழித்து தொங்கவிட்டுள்ளார்
இந்த சூழ்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகில் திமுக சார்பில் 'தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு' என்ற தீர்மான ஏற்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இயக்குனர் கரு.பழனியப்பன் கலந்துகொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய கரு.பழனியப்பன், “சிவகங்கை மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 5 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இன்றைக்கு வந்த நடிகர் விஜய் இந்தியை எதிர்த்துதான் அரசியல் செய்கிறார். அதைத்தான் நாங்களும் செய்கிறோம். எங்களுடன் வந்து விஜய் நிற்க வேண்டியது தானே? புது பொருள் விற்றால் தானே தனிக்கடை போட வேண்டும். நான் எந்த மேடையிலும் விஜயை விமர்சிப்பது கிடையாது. ஏனென்றால் திமுக விஜய்க்கு அடுத்த முறை ராஜ்யசபா சீட்டு கொடுக்க வேண்டும்? ஏனென்றால் திமுகவிற்கு அவர் வந்து விடுவார். இப்போது விமர்சனம் செய்துவிட்டு அவர் திமுக பக்கம் வரும்போது சிரிக்க வேண்டி இருக்கும் என்பதால்தான் நான் விஜய்யை விமர்சனம் செய்யவில்லை” என்று பேசினார்.
விஜய் -யை கலாய்ப்பதை போல கலாய்த்து கமலை அசிங்கப்படுத்தியுள்ளார். கமலைப் போலவே நாளை விஜய்-ம் நம்மிடம்தான் வர வேண்டும் என்ற அர்த்தம் தான் அது. தங்கள் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் ஒருவரை தனது கட்சி பிரமுகரே இப்படி பொதுவெளியில் அசிங்கப்படுத்துவதை திமுக தலைமை கண்டிக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தவிர கரு.பழனியப்பன் கமலை தான் கலாய்த்துள்ளார், இதற்கு கமல் என்ன பதிலடி தரப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.