கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் நடந்த கோர சாலை விபத்தில், திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே உள்ள பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 66-ல் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அந்தப் பகுதியில் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்கள் கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் பனம்பிக்குன்னு பகுதியில் கார் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. விபத்தில் கார் முழுவதும் நொறுங்கிய நிலையில், அதில் பயணித்த 8 பேரும் பலத்த காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மக்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 8 பேரும் ஏற்கெனவே உடல் நசுங்கி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் திண்டுக்கல்லைச் சேர்ந்த யுவ சஞ்சித், மதுரையைச் சேர்ந்த பிரசன்னா, சந்தோஷ், சேலத்தைச் சேர்ந்த விஷ்வா உள்ளிட்ட 7 பேர் கல்லூரி மாணவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துக்கு காரணம் என்ன?
விபத்து நடந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வந்ததால், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த மாற்றுப் பாதையின் அருகே சரக்கு லாரி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், போதிய எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் வெளிச்சம் இல்லாததால் கார் லாரி மீது மோதியிருக்கலாம் என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
FIR பதிவு செய்து விசாரணை
விபத்து தொடர்பாக கைப்பமங்கலம் காவல் நிலைய பொறுப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் கே வழக்குப்பதிவு செய்துள்ளார். பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 105-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக துணைக் காவல் கண்காணிப்பாளர் ரதீஷ் குமார் ஆர் நியமிக்கப்பட்டுள்ளார். விபத்து நடைபெற்ற விதம், லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த நிலை, சாலைப் பணிகள் நடைபெறும் பகுதியில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் ஒரே விபத்தில் உயிரிழந்த சம்பவம், இரு மாநிலங்களிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவர்கள் விபத்திற்கு முன்னர் சுற்றுலாவின் மகிழ்ச்சியில் எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்