தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டபோதே கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். தற்போது விஜய் முதலமைச்சரான பிறகு, அண்டை மாநிலத்தில் தவெகவின் அரசியல் பிரவேசம் உறுதியாகியிருக்கிறது.
கடந்த மே 17-ம் தேதி திருச்சூரில் தவெகவின் மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது. அதன்பிறகு கேரள தவெக சைலண்ட்டாக இருந்த நிலையில், இப்போது முக்கிய அப்டேட் வந்துள்ளது.
தென்னிந்திய மொழிகளில் பரவலாக 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் தேவன், கேரள தவெகவின் மாநிலத் தலைவராகச் செயல்படும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
சமீபத்தில் நடிகர் தேவனை தவெகவின் மூத்த நிர்வாகிகள் சென்று சந்தித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, தவெகவில் இணைவது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் அவர். செப்டம்பர் 10-ம் தேதி அவர் விஜய்யைச் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகர் தேவன், மாணவராக இருந்தபோதே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார். கேரள மாணவர் சங்கத்தில் (KSU) உறுப்பினராக இருந்துள்ளார்.
இவரது மாமா ராமு காரியத், தேசிய விருது பெற்ற ‘செம்மீன்’ படத்தின் இயக்குநர். சினிமாவில் நடிகராகப் பயணித்த இவர், வில்லன், அப்பா உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
விஜய்யுடன் இணைந்து ஷாஜகான், ஆதி, சிவகாசி உள்ளிட்ட 30 படங்களில் நடித்திருக்கிறார்.
2004-ஆம் ஆண்டு கேரள மக்கள் கட்சி என்கிற கட்சியை நிறுவினார். 2004, 2006-ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.
பின்னர், 2020-ஆம் ஆண்டு நவ கேரள மக்கள் கட்சி என்கிற கட்சியை மீண்டும் நிறுவினார். இந்தக் கட்சியை அடுத்த ஆண்டே, அதாவது 2021-ஆம் ஆண்டு பாஜகவுடன் இணைத்து, பாஜகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.
மாநிலத் துணைத் தலைவராகப் பயணித்து வந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் 3 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி பாஜகவில் இருந்து விலகுவதாக தேவன் அறிவித்தார்.
அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாஜக தலைவர் கேட்டுக்கொண்டாலும், எதுவும் பலனளிக்கவில்லை. அவரது அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், கேரள தவெகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் அவரைச் சென்று சந்தித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஜோசப் விஜய், சிலரை என்னிடம் அனுப்பி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய எனக்கு விருப்பம் இருக்கிறதா என்று கேட்டார்.
எங்களுக்குள் மிகவும் விரிவான, சுவாரசியமான உரையாடல் நடந்தது. இறுதியாக, சென்னையில் உள்ள தவெகவின் மூத்த தலைவர்களுடன் ஆன்லைனில் ஆலோசனை நடத்தினேன். கொள்கை அளவில் நான் அதற்குச் சம்மதித்தேன்.
எனவே, ஜோசப் விஜயைத் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். அவரைச் சந்திப்பதற்காக செப்டம்பர் 10-ஆம் தேதி எனக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.
அந்தச் சந்திப்புக்கான வாய்ப்பிற்காக நான் காத்திருக்கிறேன். எனவே, இறைவனின் அருளால் நான் விரைவில் தவெகவில் இணைவேன்." என்றிருக்கிறார்.
கேரளாவில் வளர்ந்து வரும் தவெக கிளைக்கு இவர்தான் தலைவராக இருப்பார் என்று பலரும் ஆரூடம் கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களாக தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தைத் தாண்டி வளருவதில் கவனம் செலுத்தி வருகிறது. வட இந்தியாவில் இன்ஃப்ளூயன்சர்கள் மூலமாக விஜய்க்கு புரோமோஷன் செய்யும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தவெக அமைச்சர்கள் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி மேடைகளில் முழங்கி வருகின்றனர். இதன் அடுத்தகட்டமாகவே கேரளாவில் தவெக கிளையை வலிமையாக்கும் பணிகள் நடக்கின்றன. தமிழகத்துக்கு அடுத்தபடியாக கேரளாவில் விஜய்க்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். இதனால், அண்டை மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்தும் பணியைத் தொடங்க கேரளா சிறந்த தேர்வாக உள்ளது.
அடுத்ததாக தென் மாநிலங்களிலும் வட இந்தியாவிலும் விஜய்யின் பிம்பத்தைக் கட்டமைத்து தவெகவை வேரூன்ற வைக்கும் பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்