தமிழகத்தில் வறுமையின் பிடியில் சிக்கி உள்ள மக்களை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் சில லட்சம் ரூபாய்க்கு சிறுநீரகம், கல்லீரலில் ஒரு பகுதியை பெற்று, அவற்றை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக போலி ஆவணங்களை தயாரித்து உடல் உறுப்பு திருட்டில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கிட்னி திருட்டு மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள், எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள்முருகன் அமர்வு முன்பு இதுகுறித்தான விசாரணை நடைபெற்றது.
பரமக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் சக்தீஸ்வரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய பொது நல மனுவில் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ள சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடி மிகவும் தீவிரமான பிரச்சினையாக உள்ளது.
பள்ளிப்பாளையத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சாய ஆலைகளில் ஈடுபட்டுள்ள ஏழைத் தொழிலாளர்களை தரகர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் நன்குநன்கு மூளை சலவை செய்து அவர்க்ளின் சுரண்டி, சிறுநீரக தானம் செய்பவர்களாக சட்டவிரோதமாகப் பயன்படுத்துகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் நிதிப் போராட்டத்தை அறிந்த இடை தரகர்கள், சிறுநீரத்திற்கு ரூ.5-10 லட்சம் வரை சலுகைகளை வழங்கி அவர்களை தயார் செய்கின்றனர்.
இந்த கிட்னி விற்பனையில் சில மருத்துவமனைகளுக்கும் தொடர்பு உள்ளது. இது மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டம், 1994 ஐ முற்றிலும் மீறுகிறது.மேலும் மனித உறுப்புகளில் வணிக ரீதியான பரிவர்த்தனைக்கு தண்டனையையும் வழங்குகிறது.
ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இந்த விவாகரத்தில் அரசியல் கட்சியினர் தொடர்பு உள்ளதால் இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரணை செய்தால் விசாரணை நேர்மையாக இருக்காது. எனவே திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது போல் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் சிபிஐ விசாரணை மேற்கொண்டால் மட்டுமே இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள்முருகன் அமர்வு, "சட்டவிரோதமாக மனித உடலுறுப்புகள் சில மருத்துவமனைகளில் திருடப்பட்டதாக தெரிய வந்துள்ளதே? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், " நோயாளிகளின் உடல் உறுப்புகளை மருத்துவர் எடுத்து தனது சொந்த தேவைகளுக்காக விற்பனை செய்வது கொடூரமானது. ஏழை எளிய மக்கள் உயிர் வாழும் உரிமையை பாதுகாப்பது அரசின் கடமை. மனித உடலுறுப்புகளை பிற பொருட்களைப் போல விற்பனை செய்வது ஏற்கத்தக்கதல்ல" என குறிப்பிட்டனர்.
மனுதாரர் தரப்பில், "சிறுநீரகம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை வழக்குப் பதிவு கூட செய்யப்படவில்லை. 6 நபர்கள் தானமாக வழங்கியதாக குறிப்பிட்ட நிலையில் 5 நபர்கள் அந்த ஊரிலேயே இல்லை. அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை" என தெரிவிக்கப்பட்டது.
அவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தினந்தோறும் பொது தளங்களில் பகிரப்பட்டு வருகிறது அவ்வாறு இருந்தும் இதுவரை ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை தகவல் தெரிந்தவுடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு இருக்க வேண்டும் அவ்வாறு ஏன் செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்.
ஏழை எளிய குடும்பத்தில் உள்ள ஒரு நபரின் கிட்னி எப்பொழுது திருடப்பட்டது என்பது கூட தெரியாமல் வாழ்வது எவ்வளவு பெரிய வேதனை என தெரிவித்த நீதிபதிகள்.
"இந்த வழக்கில் தமிழக சுகாதாரத் துறையின் தலைமைச் செயலர், ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்க்கிறது” என தெரிவித்தனர்.
கிட்னி விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், இதுபோல மனித உடல் உறுப்புகள் விற்பனை செய்வதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவான நிலை அறிக்கையை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.