தமிழ்நாடு

சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டிய கொடைக்கானல், ஒகேனக்கல்... செல்பி எடுத்து மகிழ்ச்சி

வார விடுமுறையையொட்டி இதமான சூழலை அனுபவிக்க ஒகேனக்கல் மற்றும் கொடைக்கானலுக்கு  சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். 

Malaimurasu Seithigal TV

தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தளமாக விளங்கும் ஒகேனக்கல் அருவிக்கு, கர்நாடக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த 2 நாட்களாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக, ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.

இந்நிலையில் விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால், ஒகேனக்கல் பகுதியே களை கட்டியுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள்,  நீர்வீழ்ச்சிகளில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

இதேபோல், கொடைக்கானலுக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். கொடைக்கானலில் உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், தூண் பாறை, பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கொடைக்கானல் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டு ரசித்த  சுற்றுலா பயணிகள், செல்பி எடுத்துக் கொண்டும் இதமான சூழலை அனுபவித்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.