தமிழ்நாடு

அதிமுகவினர் மீது எந்த தவறும் இல்லை... கோடநாடு விசாரணையை கைவிட வேண்டும்: பாஜக அண்ணாமலை பேச்சு

கோடநாடு விசாரணையை கைவிட்டுவிட்டு மக்களுக்கான நலத்திட்ட பணிகளை மேற்கொள்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். 

Malaimurasu Seithigal TV

கோடநாடு விவகாரத்தில் அரசியல் காழ்புணர்ச்சியோடு திமுக செயல்படுகிறது என்றும் முடியும் நிலையில் இருக்கும் வழக்கை பழி வாங்கும் நடவடிக்கையாக மீண்டும் திமுக விசாரணைக்கு எடுத்துள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்தநிலையில் கோடநாடு விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, முடித்து வைக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வரின் பெயரை சேர்த்து இருக்கிறார்கள். மேலும் அதிமுகவினர் மீது எந்த தவறும் இல்லை. அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக மட்டும் கோடநாடு வழக்கு மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் கோடநாடு விசாரணையை கைவிட்டுவிட்டு மக்களுக்கான நலத்திட்ட பணிகளை மேற்கொள்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.

தமிழ்நாட்டில் நடந்து வரும் திமுக அரசின் ஆட்சியில் இனிப்பு, கசப்பு, காரம்   கலந்து இருப்பதாக பேசிய அவர், கொரோனா இரண்டாவது அலைக்கான தடுப்பு நடவடிக்கையை மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசும் இணைந்து மேற்கொண்டது. இது இனிப்பான விஷயம் என்றும் தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாதது, பாஜக தொண்டர்களை கைது செய்தது அவர்கள் மீது பொய்யான நடவடிக்கை எடுத்தது இதெல்லாம் கசப்பு மற்றும் காரமான விஷயம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.