தமிழ்நாடு

“வி.எஸ். பாபு உடலைச் சுமந்து சென்ற முதல்வர் விஜய்” - இறுதி ஊர்வலத்தில் நடந்த சம்பவம்.. தகனத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

அவரது உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேற்று மாலை நேரில் சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்...

Mahalakshmi Somasundaram

கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (நவம்பர் 19) மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அவரது உடல் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ். பாபு, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதன் மூலம் தமிழக அரசியலில் கவனம் பெற்ற அவர், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாகச் செப்டம்பர் 9-ம் தேதி அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சுமார் 70 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பு காரணமாக நவம்பர் 19-ம் தேதி மதியம் 2.24 மணிக்குக் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து, அவரது உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேற்று மாலை நேரில் சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, வி.எஸ். பாபுவின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் அனைவரும் வி. எஸ் பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், இன்று திருவிக நகரில் உள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் வி.எஸ். பாபுவின் உடலை இறுதிச் சடங்கு முடிந்து மயானத்திற்கு அவரது உடல் எடுத்துச் செல்லும் போது, முதலமைச்சர் விஜய் அவரது உடலைச் சுமந்து சென்று அமரர் ஊர்தியில் ஏற்றினர். மறைந்த சட்டமன்ற உறுப்பினருக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், அவரது உடலைச் சுமந்து சென்ற நிகழ்வு அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இன்னும் சற்று நேரத்தில் வி. எஸ் பாபுவின் உடல் தகனம் செய்யப்பட உள்ள நிலையில் திருவிக நகர் மயானத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.