தமிழ்நாடு

பொது சிவில் சட்டம்; "தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டார் பிரதமர்" கே.எஸ்.அழகிரி விமர்சனம்!

Malaimurasu Seithigal TV

 மணிப்பூர் பிரச்சனை பற்றி பேசாமல் பொது சிவில் சட்டத்தை பேசி தேர்தல் பரப்புரையை பிரதமர் மோடி தொடங்கி உள்ளார் எனகே.எஸ்.அழகிரி பேட்டியளித்துள்ளார்.

டெல்லியிலிருந்து சென்னை வந்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பிரதமர் மோடி நேற்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். மற்ற கட்சிகள் நாட்டின் வளர்ச்சியை பற்றி தேர்தல் பரப்புரையில் பேசிவரும்போது, மோடி பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவேன் என தனது தேர்தல் பரப்புரையை ஆரம்பித்து உள்ளார். நாட்டில் ஒரே மதம் இல்லை, ஒரே இனம் இல்லை, ஒரே கலாச்சாரம் இல்லை, ஒரே இறை வழிபாடு இல்லை. நிறைய மதங்கள், மொழிகள் உள்ளன. இந்தி வேறு, தமிழ் வேறு, குஜராத்தி வேறு. எல்லாவற்றிலும் கலாச்சாரம் இருக்கிறது. இறை வழிபாடு உள்ளது. இதனால் பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு பொருந்தாது. பல தரப்பினர் வாழும் நாடுகளில் இது போன்ற ஒற்றை சட்டங்கள் பொருந்தாது. பிரதமர் தேசத்தின் பிரதான பிரச்சனைகளை விட்டு விட்டு பிரதமர் பொது சிவில் சட்டத்தில் கவனம் செலுத்தி இருக்கிறார். இதனை காங்கிரசும் மத சார்பற்ற கட்சிகளும் சரியான திசையில் எதிர்க்கும்" என தெரிவித்துள்ளார்.
 
தொடர்ந்து பேசிய அவர், அகில இந்திய கட்சியில் பொறுப்புகள் மாறக் கூடியது தான் என தெரிவித்த அவர்  தலைவர் பதவி பத்திரம் எழுதி தருவதில்லை எனவும் இது ஒரு பிரச்சனையே இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் போகாததால் மணிப்பூருக்கு ராகுல் காந்தி நாளை செல்ல இருப்பதாக கூறிய அவர்,  பிரதமருக்கு அமெரிக்க செல்ல நேரம் இருப்பதாகவும், போபாலில் வந்தே பாரத் ரெயிலை இயக்க முடிவதாகவும் ஆனால் மணிப்பூர் சென்று அமைதியை நிலை நாட்ட பிரதமருக்கு நேரம் இல்லை என விமர்சித்துள்ளார்.

"வந்தே பாரத் ரெயிலை ஸ்டேஷன் மாஸ்டரே கொடி அசைத்து தொடங்கி வைக்கலாம். ஆனால் உங்களை தவிர வேறு யார் போனாலும் மணிப்பூர் கலவரத்தை அடக்க முடியாது. முதலில் செய்ய வேண்டியதை செய்யுங்கள் என நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமரை நோக்கி கேட்ட கேள்வியை குறிப்பிட்ட அவர் இந்த கேள்வி தான் இந்த வாரத்தின் சிறந்த கேள்வி எனவும் தெரிவித்துள்ளார்.