தமிழ்நாடு

' குலசேகரன் பட்டினம் தசரா திருவிழா ' விரதத்தை தொடங்கிய பக்தர்கள்...!

திருச்செந்தூரில் புகழ்பெற்ற குலசேகரன் பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழாவானது , மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன் பட்டினத்தில் தசரா திருவிழா புகழ்பெற்றதாகும். இந்த தசரா திருவிழா, செப்டம்பர் மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த தசரா திருவிழாவில், சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் ஆனது அக்டோபர் மாதம் 5-ம் தேதி நள்ளிரவு கோவில் கடற்கரையில் நடக்கிறது. 

இந்த தசரா திருவிழாவில் காளி, அம்மன், சிவன், குரங்கு குறவன், குறத்தி, உள்ளிட்ட பல்வேறு வேடம் அணியும் பக்தர்கள் கடலில் புனித நீராடி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி வருகின்றனர். தசரா திருவிழா தொடங்கியதும் காப்பு கட்டி தங்களுக்கு வேண்டிய வேடங்கள் அணிந்து குழுக்களாகவும், தனித்தனியாகவும் சென்று காணிக்கை பெற்று 10-வது நாள் திருவிழா அன்று கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தசரா திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு தசரா திருவிழா வழக்கம்போல் நடைபெற உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.