chennai high court  
தமிழ்நாடு

“மூன்றாம் பாலினத்தவர்கள் குழந்தை தத்தெடுக்க அனுமதி வழங்கும் சட்ட திருத்தம்” -ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் கெடு!

மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்தை கூறி தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், அந்த உத்தரவை ...

மாலை முரசு செய்தி குழு

மூன்றாம் பாலினத்தவர்கள் குழந்தை தத்தெடுக்க அனுமதி வழங்கும் வகையில்  விதிகளில் திருத்தம் கோரி அளிக்க உள்ள  விண்ணப்பத்தை 12 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் குடியேற்றத் துறை அதிகாரியாக பணிபுரியும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி, பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதால் ஏற்படும் வெறுமையை போக்க, குழந்தையை தத்தெடுக்க, டில்லியில் உள்ள மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்தை கூறி தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்து, தனது விண்ணப்பத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி பிரித்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, மூன்றாம் பாலினத்தவர் என்ற ஒரே காரணத்துக்காக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், இது மூன்றாம் பாலினத்தவர்கள் சட்டத்துக்கு விரோதமானது எனவும் பிரித்திகா யாஷினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசுத்தரப்பில், சிறார் நீதி சட்டத்திலும், தத்தெடுப்பு விதிகளிலும், மூன்றாம் பாலினத்தவர்கள் தத்தெடுக்க அனுமதியளிக்கும் வகையிலான விதிகள் ஏதும் இல்லை என்பதால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என விளக்கமளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மூன்றாம் பாலினத்தவர்களும் தத்தெடுக்க அனுமதி வழங்கும் வகையில் மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க பிரித்திகா யாஷினிக்கு உத்தரவிட்டார்.

மேலும், அந்த விண்ணப்பத்தை 12 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.