தமிழ்நாடு

ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்குமாறு...தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம்...!

Tamil Selvi Selvakumar

சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தங்கம் மற்றும் வைர நகைகள், விலை மதிப்புடைய கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருட்கள் உட்பட 28 வகையான பொருட்களை சொத்து குவிப்பு வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை பறிமுதல் செய்தது. ஆனால், தற்போது ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க, வைர நகைகளை தவிர மற்ற எதுவும் கர்நாடகா நீதிமன்றத்தில் இல்லை.

இதனிடையே, ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட கர்நாடகா அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், ரூபி, மரகதம், முத்துக்கள் மற்றும் பல வண்ண கற்கள் என 30 கிலோ ஆபரணங்கள் மட்டுமே கருவூலத்தில் இருப்பதாக இந்த வழக்கின் அரசு வழக்கறிஞரான கிரண் எஸ்.ஜவாலி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் எழுதிய அரசு வழக்கறிஞர்,  சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட விலை மதிப்புடைய கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருட்கள் உட்பட 28 பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.