முரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 மீனவர்கள் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது ஆங்கில ஊடகங்கள் பெரியார் அறிவுலகம் புத்தக கொள்முதல் ஊழல் குறித்து கேள்வி எழுப்பின.
முதலில் செய்தியாளர்களிடம் மீனவ குடும்பங்களை சந்தித்தது குறித்து பேசிய உதயநிதி, "புயலில் சிக்கி 9 மீனவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது... அவர்களுடைய குடும்பங்களை சந்தித்து எங்களுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறோம். தைரியமாக இருங்க, இன்றைக்கு அவர்களுடைய குடும்பத்தாருடன் சொல்லியிருக்கிறேன். அவர்களுக்கு எங்களால் முடிந்த நிதி உதவி அளித்திருக்கிறோம்.
என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களுடன் துணையிருக்கும் என்று இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து அவர்கள் பேசும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. சில குறைகளை இந்த அரசின் மீது அவர்கள் வைத்திருக்கிறார்கள்.
29-ஆம் தேதி கடலுக்குள்ள போயிருக்கிறார்கள். 2-ஆம் தேதி இரவு வரை 9 பேரும் அவர்களுடைய குடும்பத்தினரிடம் செல்போன் மூலமாக, வீடியோ கால் மூலமாக தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். 2-ஆம் தேதிக்கு மேல் அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. உடனே அருகில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள், ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மீனவர் நலத்துறை அதிகாரிகளை போய் சந்தித்திருக்கிறார்கள், புகார் அளித்திருக்கிறார்கள். அவர்களும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்களுடைய திராவிட மாடல் அரசாக இருக்கும்போது, இந்த மாதிரி புயல் நேரங்களில் படகுகளை, மீனவர்களை நாங்கள் அனுமதிக்கவில்லை; அதற்கான முழு நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம். அதற்கு எங்களது முதலமைச்சர், எங்களது வருவாய் துறை அமைச்சர், மீனவர் நலத்துறை அமைச்சர் எல்லோரும் அடிக்கடி இங்கே ஆய்வுக் கூட்டம் நடத்தி மீனவருடைய பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறோம்.
ஆனால் இந்த அரசு அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் படகு எடுக்கவே அனுமதித்திருக்கக் கூடாது. புயல் ஆபத்துக்கான கூண்டை ஏற்றி இருக்க வேண்டும்; இது எதையுமே இந்த அரசு முறைப்படி செய்யவில்லை. கடைசியில் இந்த குடும்பத்தினர் எல்லாம் போராட்டத்தில் இறங்கிய பிறகுதான் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். எனவே எங்களிடம் கேட்பது, அரசு ஏற்கனவே 7 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்திருக்கிறது. நேற்று 10 லட்சம் கொடுத்திருக்கிறது. மீதமுள்ள 5 லட்சம் ரூபாயை உடனடியாகக் கொடுக்க வேண்டும்.
மேலும் இந்த நிவாரணத் தொகை போதாது, உடனடியாக 25 ரூபாய் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் என்னிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதை அரசிடம், அரசிடமும் எங்கள் தலைவரிடமும் சொல்வதாகச் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். நிச்சயம் இதை எங்களுடைய தலைவரிடம் தெரிவித்து இந்த அரசுக்கு இதை ஒரு அழுத்தமாக நாங்கள் கொடுப்போம். கோரிக்கையாக வைப்போம்.
இந்த ஆட்சியில் கடலுக்குப் போற மீனவர்கள் இன்சூரன்ஸ் எடுக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள். எனவே இந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் உயிரோடு இதற்குமேலும் விளையாடாமல் அவர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவித்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மாதிரியான விபத்துகள் இனி நடவாமல் இருக்க இந்த சோப்ளாங்கி அரசு இனிமேலாவது விழித்துக்கொண்டு செயல்படுகின்ற அரசாக இருக்க வேண்டும்." எனப் பேசினார்.
தொடர்ந்து பெரியார் நூலக முறைகேடு குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த உதயநிதி , " எதற்கெடுத்தாலும் அவர்கள் திமுக என்றுதான் சொல்வார்கள். பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக முறையான விசாரணைக்கு நாங்கள் தயார். திமுக ஆட்சியில் முறைகேடு நடைபெறவில்லை என்பதில் 100% உறுதியாக இருக்கிறேன். புத்தக ஆசிரியர்களின் பெயர்களை வைத்தே எந்த ஆட்சியில் ஊழல் நடந்தது எனத் தெரியும்” என்று கூறியிருக்கிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்