தமிழ்நாடு

“ சொல்லக்கூடிய கருத்துகள் அவர்களை குத்தி கிழிப்பது போல...” தமிழிசை!!

Malaimurasu Seithigal TV

அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது சிலைக்கும் உருவப்படத்திற்கும் அரசியல் கட்சித் தலைவர்களும் அரசு உயரதிகாரிகளும் மக்களும்  மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்திய புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிற்பிக்கு மரியாதை செலுத்துவதை பெருமையாக நினைக்கிறேன் எனவும் கல்வி, சமூகம், எப்படி இருக்க வேண்டும் என தொலைநோக்கு பார்வையை உறுவாக்கியவர் அம்பேத்கர் எனவும் கூறினார் தமிழிசை சௌந்தரராஜன்.

சிலர் அம்பேத்கரை குறுகிய வட்டத்திற்குள் சுருக்க நினைப்பது வருத்தமாக உள்ளது எனவும் பன்முகத்தன்மை கொண்ட அம்பேத்கரை குறுகிய வட்டத்தில் சுருக்க கூடாது எனவும் தெரிவித்தார்.  மேலும் ஆளுநர்களை குறைவாக மதிப்பிட்டு பேசுவது நல்லதல்ல எனவும் அவர்களுக்கும் தகுதி உள்ளது எனவும் அதன் அடிப்படையில் தான் ஆளுநர்கள் அமர்த்தப்படுகின்றனர் எனவும் கூறினார்.

ஆளுநர் மீது கருத்து வேறுபாடு இருக்கலாம் எனக் கூறிய அவர் ஆனால் சொல்லக்கூடிய கருத்துகள் அவர்களை குத்தி கிழிப்பது போல இல்லாமல் சகோதரத்துவத்தோடு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.