தமிழ்நாடு

பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு...இனி சொத்து கிடையாது...உத்தரவிட்ட நீதிமன்றம்!

Tamil Selvi Selvakumar

சமுதாயம் தனது பொதுப் பண்புகளை வேகமாக இழந்து வருவதாக வேதனை தெரிவித்த  சென்னை உயர் நீதிமன்றம், கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்து எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோர்களுக்கு உரிமை உள்ளது என்று உத்தரவிட்டுள்ளது.

மகன் மீது சொத்து எழுதி வைத்த பெற்றோர்:

சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, தனது சொத்துக்களை மூத்த மகன் பெயருக்கு எழுதி வைத்திருந்தார். ஆனால், வயதான காலத்தில் தங்களை கவனிக்காமலும் மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால், தான் எழுதி வைத்த சொத்துக்களை ரத்து செய்யக் கோரி பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

தள்ளுபடி செய்த கீழமை நீதிமன்றம்:

மகன் மீது எழுதி வைத்த சொத்துக்களை ரத்துச் செய்யக்கோரி பெற்றோர் தொடர்ந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். தொடர்ந்து, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா விசாரித்தார்.

நீதிபதி உத்தரவு:

நகைகளை விற்றும், சேமிப்புகளை கரைத்தும், தங்கள் மருத்துவ செலவுகளை தாங்களே கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய மகன்களின் செயல்பாடு, இதயமற்றது என விமர்சித்த நீதிபதி, கடந்த 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி, கவனிக்காத குழந்தைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக உத்தரவிட்டார்.