மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழை பயன்படுத்த வேண்டும் என்ற நீண்ட கோரிக்கை குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது தமிழக வெற்றிக் கழகம் அரசு.
இதுகுறித்து முதல்வர் விஜய் பேசியதாவது, "பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலான இலக்கண, இலக்கிய வளங்களுடன் இன்றளவும் உயிர்ப்புடன் பேசப்பட்டு வரும் உலகின் தொன்மையான மொழி என்றால், அது தமிழ் மட்டுமே. உலகம் முழுவதும் சுமார் 9 கோடி மக்களாலும், இந்தியாவில் சுமார் 8 கோடி மக்களாலும் பேசப்படும் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் கிடைத்த பெருமை.
தமிழை நாம் வெறும் மொழியாக மட்டும் கருதுவது இல்லை. அது நமது உணர்வோடும், உயிரோடும் ஒன்றிணைந்த அடையாளமாகக் கருதுகிறோம். 'தமிழ்' என்று வந்துவிட்டால் நமக்குள் ஒரு வேகம் பிறக்கிறது.
"இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்"
என்ற பாடலின் மூலம், தான் தமிழ் மொழியாலேயே வாழ்ந்து வருவதாகவும், சாகாவரம் கிடைக்கும் மருந்தாகிய அமுதத்தைக் காட்டிலும் தமிழ் மொழி மேலானது என்றும் கவிஞர் கூறுகிறார். இதை நினைத்துப் பார்க்கும்போது தமிழர்களாகிய நம்மிடையே போற்றத்தக்க ஈடற்ற உணர்ச்சியும் உருவாகிறது. சாதி, மதம், கட்சி வேறுபாடுகள் அனைத்தும் மறந்து 'தமிழன்' என்ற உணர்வு மட்டுமே மேலோங்கி இருக்கிறது.
அத்தகைய சிறப்புமிக்க தமிழ் நமது அலுவலக பயன்பாட்டிற்கு மட்டுமின்றி ஆட்சி, கல்வி, தொழில்நுட்பம், அறிவியல், மாவட்ட நீதிமன்றங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு தமிழுக்கு 'கிளாசிக்கல் லாங்குவேஜ்' (செம்மொழி) என்ற சிறப்பைத் தந்து பெருமை சேர்த்துள்ளது.
தமிழை வளர்ப்பதும், பாதுகாப்பதும் நமது கடமை. அதுமட்டுமல்லாமல் வருங்கால தலைமுறைக்கும் தமிழை அதன் வளத்தையும், பெருமையையும் அழியாமல் கொண்டு சேர்ப்பது நமது பொறுப்பாகும்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் 1956 பிரிவு 2-ஆனது, "The official language of the State of Tamil Nadu shall be Tamil" என்று தெளிவாக அறிவிக்கிறது.
மேற்சொன்ன சட்டத்தின் பிரிவு 4-ஆனது, குறிப்பிட்ட ஆட்சிப் பணிகளுக்குத் தமிழைப் பயன்படுத்த அரசு அறிவிக்கை மூலம் உத்தரவிடலாம் என்று அதிகாரம் வழங்கியிருக்கிறது. அதிலும் முக்கியமாக, மேற்படி சட்டத்திற்கு 1976-ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்களின் மூலம், உயர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், வாடகை நீதிமன்றங்கள் மற்றும் வருவாய் நீதிமன்றங்கள் ஆகியவைகளின் அனைத்து வழக்குகளிலும் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கும், தீர்ப்புகளை... மற்றும் உத்தரவுகளைத் தமிழிலேயே எழுதத் தேர்ந்தெடுக்கும் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் ஏற்கனவே சட்டரீதியான நீதிமன்ற மொழியாக உள்ள நிலையில், அந்த நீதித்துறை அமைப்பின் மாநிலத்தின் உச்சநிலையில் உள்ள மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திலும் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆர்ட்டிக்கிள் 348(1)-ன் படி, தற்போது இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் நடவடிக்கைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே ஆர்ட்டிக்கிள் 348 உட்பிரிவு 2-ஆனது, ஒரு மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன், அந்த மாநிலத்தின் ஆட்சிமொழியை அம்மாநில உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் (proceedings) பயன்படுத்துவதற்கு அதிகாரம் வழங்கிட முடியும் என்று தெரிவிக்கிறது.
மேலும் ஆட்சிமொழிகள் சட்டம் 1963 பிரிவு 7-ன் படி, மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் அம்மாநிலத்தின் ஆட்சிமொழியை ஆங்கிலத்துடன் கூடுதலாக உயர் நீதிமன்றத் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் மற்றும் உத்தரவுகள் ஆகியவற்றிற்குப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் வழங்க வழிவகை செய்கிறது. அந்த மொழியில் வழங்கப்படும் தீர்ப்புடன் ஆங்கில மொழிபெயர்ப்பும் இணைக்கப்பட வேண்டும் என்று மேற்சொன்ன சட்டம் சொல்கிறது. எனவே, நாம் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை முதன்மை மொழியாகவும், ஆங்கிலத்திற்குச் சமமான நடைமுறை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கருதுகிறோம்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி, தமிழ்நாடு சட்டமன்றம் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானம் அரசியலமைப்புச் சட்ட நடைமுறையின் அடிப்படையில் ஒன்றிய அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அன்றைய சட்டமன்ற விவாதங்களிலும் தமிழ் பயன்பாடு ஆங்கிலத்தை அகற்றும் நடவடிக்கை அல்ல; மாறாக, ஆங்கிலத்துடன் கூடுதலாகத் தமிழைப் பயன்படுத்தும் நடவடிக்கை என்ற கருத்தை வலியுறுத்தினோம்.
ஆனால், பின்னர் 2012-ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்ற முழு அமர்வு இந்த முன்மொழிவை ஏற்கவில்லை. அதன் காரணமாக ஒன்றிய அரசு மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் 2018-ஆம் ஆண்டு ஒன்றிய சட்ட அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டது.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரு கோரிக்கை ஒரு கட்டத்தில் நிராகரிக்கப்பட்டது என்பதால், அது என்றென்றும் முடிவுற்றுவிட்டது என்று பொருள் கொள்ள முடியாது. காலம் மாறியிருக்கிறது; தொழில்நுட்பம் மாறியிருக்கிறது; நீதித்துறையில் கணினிமயமாக்கல் வசதிகள் அதிகரித்துள்ளன. தமிழில் சட்டக் கல்வி, சட்ட நூல்கள், சட்ட அகராதிகள், தீர்ப்புகளின் மொழிபெயர்ப்புகள் ஆகியவை பெருமளவில் வளர்ந்துள்ளன.
எனவே, 2006-ஆம் ஆண்டிருந்த சூழ்நிலையின் அடிப்படையைக் கொண்டு, இன்றைய சூழ்நிலையை மதிப்பிடாமல், தற்போதைய வளர்ந்து வரும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் திறன்களைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.
ஒரு சாதாரண குடிமகன்/குடிமகள் தனது வாழ்க்கை, நிலம், குடும்பம், சொத்து, வேலை, உரிமை ஆகியவை தொடர்புடைய வழக்கு நீதிமன்றத்தில் நடக்கும்போது, என்ன நடக்கிறது என்பதைத் தனது தாய்மொழியில் புரிந்துகொள்ள முடிந்தால், நீதி பெறுவதும் வழங்குவதும் வலுப்பெறும். நீதி பரிபாலனத்தில் மக்களே தங்கள் தாய்மொழியில் பங்கேற்பதால் நீதியின் கரங்கள் வலுப்பெறும். எனவே, நீதியின் மொழி மக்களுக்குப் புரியும் மொழியாக இருப்பது ஜனநாயகத்தின் அடிப்படை நோக்கமாகும்.
தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் பயன்படுத்தப்படுகிற நிலையில், அதனை மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திலும் விரிவுபடுத்துவது ஒரு இயல்பான அடுத்த கட்டமாகும். எனவே, தமிழ் மொழியை மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் முதன்மையான மொழியாக அங்கீகரிக்க வேண்டும். தமிழில் மனுக்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களைச் சமர்ப்பிப்பதற்கு உரிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும். தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் மற்றும் உத்தரவுகள் அதிகாரப்பூர்வமாகத் தமிழில் வழங்கும் அமைப்பை உருவாக்க வேண்டும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்களுக்கான சட்டத் தமிழ் மற்றும் மொழிபெயர்ப்புப் பயிற்சியை ஏற்படுத்த வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டம் ஆர்ட்டிக்கிள் 348 பிரிவு 2 மற்றும் அபிஷியல் லாங்குவேஜஸ் ஆக்ட் 1963 பிரிவு 7 ஆகியவற்றின் கீழ் மாநில ஆளுநர் அவர்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகளின் மீது தேவையான அனைத்துச் சட்ட நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இந்தப்பேரவையின் மூலமாக வலியுறுத்த விரும்புகிறது நமது அரசு.
இது எந்த மொழிக்கும் எதிரான கோரிக்கை இல்லை. இந்தியாவின் பன்மைத்தன்மையை மதிக்கும் கோரிக்கை. இது ஆங்கிலத்தை அகற்றும் கோரிக்கை அல்ல; இது தமிழுக்குரிய அரசியலமைப்புச் சட்ட வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை. இது ஒரு மொழியின் பெருமைக்கான கோரிக்கை மட்டுமல்ல, இது ஒரு குடிமகன்/குடிமகள் தனது மொழியில் நீதியைப் புரிந்துகொள்ளவும், அணுகவும், அனுபவிக்கவும் உரிமை பெற வேண்டும் என்ற ஜனநாயகக் கோரிக்கையாகும்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி, மெட்ராஸ் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழியாகப் பயன்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசும், மாண்புமிகு குடியரசுத் தலைவரும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை இந்தப் பேரவையில் நான் முன்மொழிகிறேன்.
இதனை மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்