தமிழ்நாடு

மதுரை மேயர் மாற்றமா?  டோஸ் விட்ட நேரு.... அப்செட் ஆன மேயர்!!

Malaimurasu Seithigal TV

உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு முக்கிய புள்ளிகளான முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் மற்றும் மாவட்ட செயலாளர்களான கோ.தளபதி, மூர்த்தி, மணிமாறன் உள்ளிட்டோர் தனது ஆதரவாளர்களை முன்னிறுத்தினர். இறுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளரான பொன்.வசந்தின் மனைவி இந்திராணிக்கு மேயர் பதவி வழங்கப்பட்டது. துணை மேயர் பதவி கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் தேர்வு:

கடந்த மாதம் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் தேர்தலில் நான்காக இருந்த மதுரை மாவட்டத்தை நிர்வாக காரணங்களுக்காக மூன்றாக பிரிக்கப்பட்டது. அதிலும் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ஆதரவாளரான அதலை செந்திலை முன்னிறுத்தினார். நீண்ட காலமாக திமுகவில் உள்ள ஏற்கனவே மாவட்ட செயலாளராகவும்  உள்ள கோ.தளபதி மாற்றப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. மனக்கசப்பில் இருந்த மற்ற இரண்டு மாவட்ட செயலாளர்களான மூர்த்தி மற்றும் மணிமாறன் ஆகியோர் கோ.தளபதிக்கு ஆதரவை தெரிவித்தனர். இறுதியில் கோ.தளபதிக்கு  மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அப்செட்டில் இருந்த பிடிஆருக்கு கடந்த வாரம் அமைச்சரவை மாற்றப்பட்ட போது கூடுதலாக புள்ளியியல் துறை வழங்கப்பட்டது.

மேயருடனான மோதல்:

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் எந்த ஒரு அரசு நிகழ்ச்சிகள் என்றாலும், ஏன் அமைச்சர் மூர்த்தியே விழா மேடைக்கு வந்தாலும், மேடைக்கு வராமல் பிடிஆர் வருகைக்காக வெளியிலே காத்திருக்கும் மேயர் இந்திராணி என்று பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்து வந்தது. மேலும் இரு அணிகளாக மதுரையில் திமுகவினர் தற்போது செயல்பட்டு வருகின்றனர். மேயரின் செயல்பாடுகளும் பெரிதளவில் இல்லை என்ற போக்கு கட்சி வட்டாரங்களிலும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது .

இந்நிலையில் கடந்த வாரம் மதுரை Circuit House ல் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மாநகராட்சி வளர்ச்சி பணி, நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்றும் கேட்கப்பட்டுள்ளது. மேலும் மேயரின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்றும் நேரு தெரிவித்ததாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று மதுரை மாநகராட்சி திமுக குழு தலைவர் மற்றும் செயலாளர்கள் பட்டியல் வெளியானது. அதில் தலைவராக கோ.தளபதியின் விசுவாசிவான ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து மதுரை அரசியலில் இருந்து பிடிஆர் ஒதுக்கப்படுகிறார் என்று கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.