தமிழ்நாடு

தீபாவளியை முன்னிட்டு முன்கூட்டியே மகளிர் உரிமைத்தொகை!

Malaimurasu Seithigal TV

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை முன்கூட்டியே  வங்கி கணக்கில் செலுத்த இருப்பதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டதில், ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். அதில் இறுதியாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. 

இதையடுத்து மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் அக்டோபர் 25ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி அக்டோபர் 25ம் தேதி வரை 11 லட்சத்து 85 ஆயிரம் நபர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து, தகுதியானவர்களுக்கு வரும் 25ம் தேதி முதல் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் எனவும், தகுதியான அனைவருக்கும்  உரிமை தொகை கிடைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே  வங்கி கணக்கில் செலுத்த இருப்பதாகவும், தகுதியாக இருந்தும் பணம் கிடைக்க பெறாதவர்களுக்கு இம்மாதம் 10 ஆம் தேதிக்குள் பணம் அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை  எடுத்து வருவதாகவும் கூறியுள்ளனர்.