தமிழ்நாடு

கலைவாணர் அரங்கம் முன்பு விநாயகர் சிலைகளுடன் மறியல்!

Malaimurasu Seithigal TV

சட்டசபை நடந்து வரும் கலைவாணர் அரங்கம் முன்பு விநாயகர் சிலைகளுடன் மறியலில் ஈடுபட்ட 177 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது, பொது இடங்களில் விழாவை கொண்டாடுவது ஆகியவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால்  நேற்று சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் கலைவாணர் அரங்கத்தின் பிரதான வாயில் முன்பு, வாலாஜா சாலையில், தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் நல சங்கத்தினர் விநாயகர் சிலைகளுடன் சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து பிறகு விடுவித்தனர். இந்நிலையில் மறியலில் ஈடுபட்ட சங்கத்தினர் 177 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளான 143- சட்டவிரோதமாக கூடுதல், 341- வெளியே செல்லவிடாமல் தடுத்து நிறுத்துதல், 269 -உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல் மற்றும் தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டம், சென்னை காவல் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.