தமிழ்நாடு

மழைநீர் வடிகால் பணிகள் கிடப்பில் இருப்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி தர்ணா...!

மழைநீர் வடிகாலுக்காக தோண்டபட்ட பணிகள் இரண்டு மாதங்களாக முடிக்கப்படாமல் கிடப்பிலேயே இருப்பதால் மாமன்ற உறுப்பினர், பணி நடக்கும் இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Malaimurasu Seithigal TV

வடசென்னை எர்ணாவூர் பகுதியில் அமைந்துள்ள, எர்ணேஷ்வரன் கோவில் 4வது தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை நீர் வடிகால்வாய் திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டு குழிகள் தோண்டப்பட்டு உள்ளது. அது முழுமையாக முடிக்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த குழிகளிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவகூடிய அபாயம் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள்  தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினரான ஜெயராமன், அப்பகுதி மக்களோடு சேர்ந்து, பணிகள் முடிக்கப்படாமல் பாதியில்  நிறுத்தப்பட்ட பகுதியில் தரையில் அமர்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி விரைந்து பணிகளை முடிக்க வேண்டுமென்றும், காலதாமதம் ஏற்படுத்தும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோஷங்களை எழுப்பி, பணி நடந்தால்தான் இந்த இடத்தை விட்டு நகர்வேன் என்றும் மாமன்ற உறுப்பினர் ஜெயராமன்  தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது..