தமிழ்நாடு

86 இளநிலை மருத்துவ படிப்பு இடங்களை நிரப்பும் விவகாரம் - மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Tamil Selvi Selvakumar

அகில இந்திய ஒதுக்கீட்டில் 86 இளநிலை மருத்துவ படிப்பு இடங்களை நிரப்புவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து சட்ட ரீதியிலான கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் இலட்சினையை திறந்து வைத்தார். தொடர்ந்து பன்னாட்டு மருத்துவ ஆய்வு இதழினையும் அவர் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக மருத்துவமனைகளின் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அகில இந்திய ஒதுக்கீட்டில் 86 இளநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களை உடனடியாக நிரப்ப வில்லையெனில், அந்த வாய்ப்பை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்ற கடிதம் குறித்து மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை என்றார்.

மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டில் 86 இளநிலை மருத்துவ படிப்பு இடங்களை நிரப்புவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து சட்ட ரீதியிலான கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.