மனிதனை மனிதனே பல்லக்கில் தூக்கிச் செல்லும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலாடுதுறை தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், உள்ளிட்டோர் சந்தித்து பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பட்டின பிரவேசம் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியதாக கூறினார்.
இதனிடையே பட்டினபிரவேச நிகழச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். தடை நீக்கப்பட்டதை அடுத்து வரும் 22 ஆம் தேதி தருமபுர ஆதினத்தை பல்லக்கில் சுமந்து செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது.