Cm vijay 
தமிழ்நாடு

"தவெக தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம்” – திமுக, அதிமுக புறக்கணிப்பு.. எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

ஆலோசனைக் கூட்டம் நடத்துவது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சி

Muthu Lakshmi

இன்று தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை தவெக அரசு ஏற்பாடு செய்தது. மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகளால் தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கி, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டம் முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்திற்கான அழைப்பிதழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆனாலும், முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை, இன்பதுரை உள்ளிட்ட சில உறுப்பினர்கள் தற்போது டெல்லியில் இருப்பதால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என கூறப்படுகிறது. தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டப் போராட்டங்கள் குறித்து தங்களது கருத்துகளையும் கேட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியிருந்த நிலையில், பாமகவும் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்தது. தேமுதிக உறுப்பினர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசனும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இதனிடையே, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த முன்னெடுப்புகள் நடந்துள்ளன. மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், தொகுதி மறுவரையறை தொடர்பாக அவசரமாக ஆலோசனைக் கூட்டம் நடத்துவது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சி எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 57 நாடாளுமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் கட்சிகளின் எம்.பி.க்கள் 19 பேர் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் – 12, விசிக – 2, சிபிஐ – 2, சிபிஎம் – 2, மதிமுக – 1, ஐயுஎம்எல் – 1 மற்றும் தவெகவின் முக்கிய கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தொகுதி மறுவரையறை விவகாரம், காவிரி – மேகதாது அணை பிரச்சினை என அடுத்தடுத்து எழுந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கு மத்தியில், இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்திற்குப் பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், “எண்ணிக்கையை கூட்டுவதால் நாடாளுமன்றம் கேலிக்கூத்தாகிவிடும். எனவே, அந்த எண்ணிக்கையை கூட்டும் எண்ணத்தை முற்றிலுமாக கைவிட்டு, 543 என்ற எண்ணிக்கையே தொடர்வதற்கு ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என்பதை தமிழக அரசு வலியுறுத்துகிறது என்பதை இந்தக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். மேலும், திமுக மற்றும் அதிமுக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றாலும், அவர்கள் இதே நிலைப்பாட்டைத்தான் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

“இந்த மசோதாவை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தால், அது தமிழ்நாட்டிற்கு செய்யும் துரோகம்” என்று காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.