தமிழ்நாடு

டெண்டர் முறைகேடு புகார் குறித்து ஆய்வு... தவறு யார் செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை... ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எச்சரிக்கை...

கடந்த ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேடு குறித்து அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது,  தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV
சென்னை ரிப்பன் மாளிகையில், தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு சொந்தமான இடங்கள், சொத்துக்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் நிகழ்வை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக அமைச்சர் தலைமையில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகம் மற்றும் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிபணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், சாலை வசதி, மயானம் கழிவு நீர் திட்டங்கள் எவ்வாறு நடைபெறுகிறது முதலியவற்றை நிர்வாகிகள் உடன் கேட்டறிந்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். மேலும், வருகின்ற பட்ஜெட் கூட்டதொடரில் வகுக்கப்பட உள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறினார்
எதிர்வரும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆங்காங்கே கிணறுகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர், குறிப்பாக சென்னையில் தண்ணீர் தேங்கும் இடங்களான ராயப்பேட்டை, பெசன்ட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதேபோல் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தற்போது 900MLD தண்ணீர் கிடைத்து வருவதாகவும், கூடுதலாக 400ml தண்ணீர் கிடைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 2 ஆண்டுகளுக்குள் 100% அளவிற்கு தண்ணீர் கிடைக்கும் என்றார். அதுமட்டுமின்றி பொதுமக்களின் வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேடு குறித்து அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது என்றும், தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.