தமிழ்நாடு

வள்ளலார் வசித்த வீட்டில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு: வடலூரில் 72 ஏக்கரில் வள்ளலார் மணிமண்டபம்  

Malaimurasu Seithigal TV

வடலூரில் 72 ஏக்கரில் வள்ளலாருக்கு மணி மண்டபம் அமைக்க, வரைபடம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் 5ஆம் தேதி ராமலிங்க அடிகளாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள வள்ளலார் வாழ்ந்த இல்லத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுவரை எந்தவொரு அறநிலையத்துறை அமைச்சரும் இந்த வீட்டை ஆய்வு செய்யாத நிலையில், தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் முதல்முறையாக ஆய்வு செய்ததாகக் கூறினார். ராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லத்தை புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, வடலூரில் 72 ஏக்கர் நிலப்பரப்பில் வள்ளலார் மணிமண்டபம் அமைக்க, வரைபடம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்கி, கோவில் திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றார். இதற்கென தமிழகத்தை சென்னை, மதுரை, திருச்சி என 3 மண்டலங்களாகப் பிரித்து, தனி நீதிபதிகள் தலைமையில் எந்தவொரு தவறுக்கும் இடமில்லாமல் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.