தமிழ்நாடு

"போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை" அமைச்சர் சிவசங்கர் உறுதி!

Malaimurasu Seithigal TV

போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், நிரந்தர பணியாளர்கள் பணிக்கு எடுத்தப்பின் ஒப்பந்த பணியாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை பல்லவன் இல்லத்தில் ரத்த தான முகாமை துவக்கி வைத்து, அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குளீரூட்டப்பட்ட ஓய்வறையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து மறைந்த போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கிய அவர், போக்குவரத்து ஊழியர்களுக்கான வழங்க வேண்டிய 171 கோடி நிலுவைத் தொகையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், போக்குவரத்துத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை எடுப்பது தற்காலிக ஏற்பாடு தான் எனவும், விரைவு போக்குவரத்து கழகத்துக்கு பணியாளர்கள் எடுக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என கூறிய அவர், நிரந்தர பணியாளர்கள் எடுத்தப்பின் ஒப்பந்த பணியாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் கணக்கிடப்பட்டு வருவதாகவும், தேவைக்கு ஏற்ப பணியாளர்கள் எடுக்கப்படுவார்கள் என கூறினார்.  மேலும், போக்குவரத்து துறைக்கு 4200 புதிய பேருந்துகள் வாங்கப்படவுள்ளதாகவும் அவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.